3. அகத்திணைத்தோற்றம் அகத்திணையின் தோற்ற வளர்ச்சிகள் தொல்காப்பியம் கூறும் இலக்கிய விதிகளாலும் சங்கவிலக்கியங்களாலும் தெற்றென அறியப்படும். அகத்திணை உருவாகுங் காலத்து இருந்த நூல்களையும், தொல்காப்பியத்துக்கு முன் இருந்த நூல்களையும், தொகையாக நாம் இழந்தோம். இழந்த மொழித் தனத்தைத் தெய்வச் செயலால் எய்தப் பெறுவோமேல், (இதற்கு உ.வே.சா. பலர் பிறத்தல் வேண்டும்) பழந்தமிழ் இலக்கியம் கருக்கொண்ட நிலையையும், ஒழுங்கு பெற ஊட்டம்பெற்று அகத்திணையாக உருக்கொண்ட நிலையையும் படி முறையாகக் காட்டச் சான்று பல கிடைக்கும். நமக்குக் கிட்டா அத்தொன்னூல்களை அவற்றின் அணிமைக் காலத்து வாழ்ந்த தொல்காப்பியரும் சங்கப் புலவர்களும் கற்றிருப்பர் என்றும், கற்றுத் தம் செய்யுட்களில் அத்தொன்னூல்களின் சொற்களையும் சொற்றொடர்களையும் மரபுகளையும் கருத்துக்களையும் போற்றிப் பொதிந்திருப்பர் என்றும் துணிவதில் தடை என்ன? முந்துநூல் கண்டு எழுதினார் தொல்காப்பியர் எனப்பாயிரம் புகல்கின்றது. ‘எழுதிணை யென்ப’, ‘மொழிப புலன் நன்குணர்ந்த புலமையோரே’, ‘பாடலுட் பயின்றவை நாடுங்காலை’ என்று நூற்றுக்கு மேலாக வரும் தொடர்களிலிருந்து, தொல் ____________________________________________________ Cf. K.M. Panikkar, A survey of Indian History, p.2 |