காப்பியத்துக்கு முன்னே பற்பல நூல்கள் இருந்த வரலாறும், அந்நூல்களின் செய்திகளைத் தொல்காப்பியம் தழுவிக் காத்து நிற்கும் வழிநிலையும் எளிதில் விளங்கும். மேலும் சங்கத்தமிழ்மக்களின் வாழ்க்கை அவர்க்கு முன்னையோர் நடத்திய வாழ்வினின்றும் மிக வேறுபட்டதென்று கருதுதற்கில்லை. ஓரின மக்களின் பழக்க வழக்கங்களில் நனிசிறு மாறுதல்களே காலவயத்தால் பண்டு ஏற்பட்டன. அறிவியலேற்றம் விரையும் இஞ்ஞான்றும் பன்னூறாண்டுத் தொல் வழக்காறுகள் சமுதாயத்தில் ஊன்றிய வேரோடு நிலைத்திருப்பக் காணலாம்’. இவ் விளக்கத்தால் கொள்ளக் கிடப்பது என்ன? அகத்திணை தோன்றிய முதற்காலத்தை நோக்குழிச் சங்கவிலக்கியம் காலத்தால் பிற்பட்டதேனும், கருத்துவகையால் அகத்திணை முதனூலுக்கு மாறுபட்டதன்று; ஆதலின் அகத்திணை யாராய்ச்சிக்குச் சங்க விலக்கியங்களை நம்பலாம் என்பது. சங்க இலக்கியத்தின் தகுதி இன்று உள்ள தமிழ்ப் பாட்டு எதுவும் தமிழிலக்கியத்தின் தொடக்க காலத்தைச் சார்ந்ததில்லை. நாம் பழமையெனப் போற்றிப் பாராட்டும் சங்கப் பாட்டுக்கூட தொல்காப்பியக் காலத்து (கி.மு. 3-ஆம் நூற்றாண்டு) எழுந்ததில்லை. சங்கப் பாடல்கள் என்பவை முந்திய யாப்பு விதிகளை அப்படியே பின்பற்றிப் பாடப்பட்டவை என்றும், நுணிகி யுயர்ந்த பழைய இலக்கிய மரபுகளைத் தழுவி நிற்பவை என்றும் பேராசிரியர் திரு. சீனிவாச அய்யங்கார் மொழிவது முற்றும் பொருந்துரையாகும்.1 அகப்பாட்டின் பலவகைக் கூறுகளை வரலாற்றுக் கண்ணோடிக் காணும்போது இவர் துணிபு மேலும் தெளிவாகின்றது. தமிழில் எவ்வளவோ அகப்பாடல்கள் இருந்தன; அவற்றிலிருந்து அகவிலக்கணம் எழுதப்பட்டது; நுண்ணிய விதிகள் வகுக்கப்பட்டன; துறைகள் அமைக்கப்பட்டன; இலக்கணக் குறியீடுகளும் படைக்கப்பட்டன; இவ்வளவிற்கும் பிந்தியே நம் சங்கப்பாக்கள் இயற்றப்பெற்றன. இக்கோட்பாட்டின் உறுதிக்குச் சான்று பல வேண்டா. குறியீட்டுச் சொற்களையும் அமைத்துச் சங்கச் சான்றோர்கள் பாடியிருப்பதே ஒரு பெருஞ்சான்று. சங்கத் தொகை நூல்களில் வரும் அத்திணைச் சொற்கள்: பல்பூங் கானற் பகற்குறி மரீஇச் செவ்வல் கொண்க செறித்தனள் யாயே (நற். 258) பின்னிலை முனியா நம்வயின் (நற். 349) வேட்டனை யல்லையால் நலந்தந்து சென்மே (நற். 395) ____________________________________________________ 1. History of the Tamils, p. 150. |