பக்கம் எண் :

அகத்திணைத் தோற்றம்93

     அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட
     என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய் (கலி. 39)
     பொருள்வயிற் பிரிதல் வேண்டும் என்னும்
     அருளில் சொல்லும் நீசொல் லினையே (கலி. 21)
     ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே (நற். 391)
     அழாஅல் தோழி அழுங்குவர் செலவே (குறுந். 135)
     வாரான் அவனெனச் செலவழுங் கினனே (ஐங். 427)
     தேர்செல வழுங்கத் திருவிற் கோலி
     மனைமருண் டிருந்த என்னினும் (அகம். 189)
     மாமயி லன்னார் மறையிற் புணர்மைந்தர்
     காமங் களவிட்டுக் கைகொள் கற்பு (பரி. 11)
     கன்னிமை கனியாக் கைக்கிளைக் காமம் (பரி. 11)
     அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர் (அகம். 203)
     அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர் (நற். 143)


இவ்வாறு சங்கப் பனுவல்கள் இலக்கணவழி வந்த இலக்கியமாகவும்,
காலப்பிற்பட்டனவாகவும் இருத்தலின், முதனூல்கள் போல அகத்திணையின்
தோற்ற ஆய்வுக்கு உகந்த கருவியாகா என்று கொள்ளலாமோ எனின்,
அதுதான் இல்லை. ஒரு மரம் தந்த விதையிலிருந்து உண்டாக்கிய மரம்
வேற்றுச் சாதியாகுமோ? முற்றும் இலக்கண வழிவந்த நம் சங்கவிலக்கியம்
அவ் விலக்கணத்தைத் தந்த மூலவிலக்கியத்தோடு ஒப்ப மதிக்கத்தக்கது என்று
சுட்டுவதற்கே, துறைச்சொற்களின் ஆட்சியை எடுத்துக் காட்டினேன். இதனால்
சங்கவிலக்கியத்தின் அடிப்படைபற்றி யான் நிறுவும் அகத்திணை முடிபுகள்
காயாகா, பழமாம் என்பது என் துணிபு.


                             II

     பண்டைத் தமிழரின் வாழ்வியல் நோக்கம் அல்லது தமிழியம்


     அகத்திணைத் தோற்றம் சமுதாயவியல் மானிட நிலவியல் தொல்
தமிழினத்தின் உளவியல் என்னும் முக்கூற்றுத் தன்மைகளைச் சார்ந்து நிற்பது.
ஆதலின் இம் மூவகையாலும் நாம் ஆராயவேண்டும். இம் மூவகையுள்
அகத்திணைப் பிறப்புக்குச் சிறந்தது எது? என்று கணிக்க முடியாது. மூன்றும்
சிறந்தனவே. அகத்திணைக்கு உரிய இச் சிறப்பியலைத் தனித்தனியாக
விளக்குதற்கு முன்னர், பண்டைத் தமிழினத்தின் வாழ்க்கை முழுதும், சிறிய
பெரிய எச்செயலகத்தும், உயிரென ஓடிக்கிடக்கும் ஒரு தமிழியத்தை-
நினைவியலை-நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இவ் விளக்கமில்லாத்
தமிழாராய்ச்சி மண்ணை விண்ணெனவும் மலையைக் கடலெனவும் கருதிய
பெருங் குற்றப்படும். நாம் பிறந்து வாழும்