பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 108

சாதனைகள் நிறைந்த வருஷம்


     புதுக்கவிதை வரலாற்றில் 1962 விசேஷமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு
காலகட்டம் ஆகும். அதை சாதனைகள் நிறைந்த வருஷம் என்று கூறலாம்.

     அவ்வருடத்தின் நவம்பர் இதழில் (ஏடு 47) ‘எழுத்து’ நியாயமான பெருமையோடும்
மகிழ்ச்சியோடும் எழுதிய தலையங்கத்தின் முக்கிய பகுதியை இங்கே தரவேண்டியது
அவசியமாகும். “சமீபத்தில் எழுத்து வாசகர் ஒருவர் தன் கடிதத்தில் பின் வரும் வரிகளை
எழுதி இருந்தார்”.

     ‘எழுத்து கவிதையில் காட்டிவரும் சாதனை நீங்கள் ஆரம்பத்தில்
எதிர்பார்த்ததாயிராது என நம்புகிறேன்’.

     அவர் குறிப்பிட்டிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை...

     உண்மையில், புதுக்கவிதை 1959-ல் எழுத்துவில்தான் பிறந்தது என்று சொல்ல
முற்படமாட்டோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பே, ந.பி.யும் கு.ப.ராவும்
வல்லிக்கண்ணனும் பிறப்பித்துவிட்ட குழந்தை அது. ஆனால் 1959 முதல் இன்று வரைய
நாட்களில் தான் இந்தப் புதுக்கவிதை இடம் கண்டு பிடிக்கப்பட்டு நாமகரணமும்
இடப்பட்டது.

     ‘வசனத்தை முறித்துப் போட்டு எழுதுவது, ‘விஜிடபிள் பிரியாணி’, ‘கோவேறு
கழுதை,’ யாப்பு தெரியாமல் ஏதோ கிறுக்கல்கள் என்றெல்லாம் கண்டவாறு பரிகாசத்துக்கு
உள்ளாகி இருந்த ஒரு முயற்சிக்கு மதிப்பு கிடைத்துவிட்டது. இந்த நாட்களில் தான்
பாரதியின் ‘வசனகவிதை’ ஏற்றுக் கொள்ளப்பட்டு ந.பிச்சமூர்த்தியின் புதுக்கவிதைகளும்
இன்று அங்கீகரிக்கப்பட்டுவிட்டன.

     ந.பி. ஆரம்பித்து வைத்த புதுக்கவிதை முயற்சி இயக்கம் எழுத்துவில் தொடர்ந்தது.
மயன், சிட்டி, வல்லிக்கண்ணன் ஒன்று சேர, பின்னர், தி.சோ. வேணுகோபாலன், டி.கே.
துரைஸ்வாமி, தரும சிவராமு, சி. மணி, எஸ். வைத்தீஸ்வரன், குறிப்பாக இன்னும் சிலரும்
கலந்து கொண்டு புதுக் கவிதையை வளப்படுத்தி வருகிறார்கள், சுமார் இருபத்தைந்து
கவிகளின் குரல்களை எழுத்து வாசகர்கள் இந்த நான்கு ஆண்டுகளில் ‘எழுத்து’ மூலம்
கேட்டுவந்திருக்கிறார்கள். ஆனால் இந்தக் குரல்கள் ஒரே தொனியாக இல்லாமல் பல்வேறு
விதமாக தன் தன் ஒலியைக் காட்டும் முகமாக அமைந்திருப்பதை பார்க்கிறோம். அவர்கள்
வைக்கும் முத்திரைகளும் வேறு வேறு.

     இந்தச் சமயத்தில் 1912-17ல் ‘இமேஜிஸம்’ என்ற படிமக் கொள்கையை வைத்துக்
கொண்டு இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் டி.இ. ஹும், எஸ்ரா பவுண்டு, ரிச்சர்ட்
ஆல்டிங்கடன், எமிலோவல் போன்றோர் கவிதை புனருத்தாரணத்தில் முழு மூச்சாக
ஈடுபட்டதை கவனத்துக்குக் கொண்டுவர வேண்டி இருக்கிறது. தங்களுக்கு முன் சென்ற
பெரியவர்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.