பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 110

மைல் கல்லை நாட்டுகிறது. நீளத்தில் மட்டுமல்ல; உள்ளடக்கம், உருவ அழகு, படிமச்
சிறப்பு, வாழ்க்கைப் பார்வை, மதிப்பு, தத்துவ நோக்கு, உத்திகையாளுதல் இத்யாதிகளில்
சிறப்பு விளங்குகிறது. பிரிட்டிஷ் கவி டி.எஸ். எலியட்டின் ‘ஜே ஆல்ஃப்ரட் ப்ரூஃபராக்கின்
காதல் கீதம்’ பாழ் நிலம் பாணியில் தமிழில் வெளிவரும் முதல் நீண்ட கவிதை அல்லது
குறுங்காவியம் என்று இதைப்பற்றி நினைக்கத் தோன்றுகிறது. இந்தக் கவிதையை வெளியிட
வாய்ப்புப் பெற்றதில் எழுத்துக்குப் பெருமை.”

     ‘நரகம்’ புதுக்கவிதையில் ஒரு சோதனை முயற்சி; வெற்றிகரமாக அமைந்த நல்ல
சாதனை, நாகரிக நகரத்தில் திரியும் ஒருவனது உணர்வுக்கிளர்ச்சியை, காம உணர்வு தூண்டி
விடும் உள்ளக் குழப்பத்தை, அதை வேதனையாக வளர்த்துவிடுகிற புறநிலைகளை,
அவனுடைய ஏக்கங்களை விவரிக்கிறது இந்நெடுங் கவிதை. வர்ணனைகளும், புதுப் புது
உவமைகளும் நயமாகச் சித்திரிக்கப்படுகின்றன இதில்.

     உலக இலக்கியத்தில் புதுக்கவிதை பிரமாக்கள் தங்கள் படைப்புக்களில்
பழங்கவிதைகளிலிருந்து சில சில வரிகளை, பொருள் பொதிந்த வாக்கியங்களை அப்படி
அப்படியே எடுத்தாண்டு தங்களுடைய கற்பனையை வளர விடுவதை ஒரு உத்தியாக
அனுஷ்டித்திருக்கிறார்கள். சி.மணியும் இவ்உத்தியைத் திறமையாகக் கையாண்டு வெற்றி
பெற்றுள்ளார். அவருடைய உவமைகள் புதுமையானவை.
 
  ‘காலத்தின் கீற்றுகள்
வாசமாவில் மறைவதென
உள்ளங்கைக் கோடுகள்
இருளில் மறையும் வேளை
தந்த துணிவு செங்கையை
உந்த நின்ற தையலர்,
தலைவன் வரவும் சற்றே
உயரும் தலைவி விழியாக
மறைக்கும் சேலை சாண் தூக்கி,
காக்கும் செருப்பை உதறிவிட்டு
கடலுக்கு வெம்மை யூட்ட
கிழக்கே அடிபெயர்ந்து
அலையை அணைக்கவிட்டார்
ஓரடி ஒளிரும் கால்கள்
மாசறு மதங்கள் போல
வானுக்கு வழிகாட்ட.’

     ரேடியோவை பாடவிட்டு, அதில் எழுந்த சங்கீதம் பிடிக்காததால் படீரென அதை
நிறுத்திய செயலுக்கு அழகான ஒரு உவமை--
 
‘திடுமென் றோராண் வரவே
வாரிச் சுருட்டும் மரபு
வளர்த்த வொரு மங்கையென
விரைந்தே யணைத்து விட்டு