புதுக்குரல்கள் | “கவிதைத் துறையில் ஒரு புதிய திருப்பத்தைக் காட்டுகிற கவிதைத் தொகுப்பு இது. பாரதிக்குப் பிறகு அந்த கவி காட்டிய பாதையில் சென்று உருவம் உள்ளடக்கம் இரண்டிலும் சோதனை செய்துள்ள 24 கவிகளின் 63 கவிதைகள் அடங்கி இருக்கின்றன. இந்த இருபதாம் நூற்றாண்டு மனிதனுக்குத் தான் வாழும் உலகம் ஒரு விசித்திர போர்க்களம் அவனுக்கு ஏற்படும் மோதல்கள் சிக்கலானது. அவற்றின் வெளியீட்டை இந்தப் புதுக்குரல்களில் காண்கிறோம். ஒருவர் நோக்கு மற்றவருக்கு இல்லை. ஒருவர் அனுபவம் மற்றவரிடமிருந்து மாறுபட்டது. அவரவர் நம்பிக்கையும், வேறு வேறு. அவரவர் சொல்திறனும் நானா விதமானது. அவநம்பிக்கையும் நம்பிக்கையும், சமுசயமும் தன்னம்பிக்கையும், கவலையும் உறுதியும் ஆசையும் ஆதங்கமும் லட்சியமும் யதார்த்தமும் உண்மையும், போலியைக் கண்ட ஆத்திரமும் எத்தனை விதமாக ஒலிக்கின்றன இவர்கள் குரல்களில்!” ‘எழுத்து பிரசுரம்’ ஆன ‘புதுக்குரல்கள்’ பற்றிய ஒரு அறிவிப்பு இது. 1962 அக்டோபரில் இத்தொகுப்பு வெளியாயிற்று. அதுவரை ‘எழுத்து’வில் அச்சாகியிருந்த சுமார் 200 கவிதைகளிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றன. “இந்த தொகுப்பு தெரிவுக்கு பொறுப்பு நான்தான் என்றாலும் (சுமார் 200 கவிதைகளிலிருந்து 63 கவிதைகளை தேரந்தெடுப்பதில்) தன் மூப்பாக நடந்து கொண்டு விடவில்லை நான். நண்பர்கள் சி.மணி, பிச்சமூர்த்தி, வல்லிக்கண்ணன், எம். பழனிசாமி, ஆர். வெங்கடேசன், என்.முத்துசாமி ஆகியோரிடமிருந்து தெரிவு பட்டியல்களைக் கேட்டு வாங்கி என்னுடையதையும் சேர்த்து முடிவு செய்தது இது. அவர்கள் குறிப்பிடாததும் சில சேர்க்கப்பட்டிருக்கும். ஆனாலும் புக்கவிதைத் துறையில் நல்ல ஈடுபாடுள்ள ஆறேழு பேர்கள் மதித்தவை அடங்கிய தொகுப்பு இது. அவர்கள் உதவி இன்றி என் வேலை சுளுவாகி இராது. எனக்குள் உள்ள இருட்டடிப்புகள் என் தெரிவுக்கு குந்தகம் விளைவித்திருக்கவும் கூடும்” என்று சி.சு. செல்லப்பா, இத்தொகுப்புக்கு உரிய கவிதைகள் தேர்ந்து எடுக்கப்பட்ட விதம்பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய நேர்மை பாராட்டப்பட வேண்டிய பண்பு ஆகும். செல்லப்பா இத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை (‘நுழைவாசல்’) நல்ல ஆய்வுரையாக அமைந்துள்ளது. உலக இலக்கியத்தில் புதுக்கவிதையின் தோற்றம் குறித்தும், கவிதையின் தன்மை பற்றியும் இம்முன்னுரையில் கூறப்பட்டுள்ளவை கவனத்துக்கு உரியன. “மேற்கே இந்த புதுக்கவிதை பிறந்ததைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது லாபகரமானது, எந்த ஒரு கவியும் தன் காலத்தில் | | |
|
|