பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 118

                                                                 வளர்ச்சி


     பிச்சமூர்த்தியின் கவிதைத் தொகுப்பு ‘காட்டு வாத்து’ புதுக்கவிதைகளின் தொகுப்பான
‘புதுக்குரல்கள்’ ஆகிய புத்தகங்கள் வெளிவந்த பின்னர், புதுக்கவிதையை ஆதரித்தும்,
குறை கூறியும் எதிர்த்தும் அபிப்பிராயங்கள் பரவலாயின.

     பழந்தமிழ் இலக்கியத்தில் நல்ல தேர்ச்சியும் புதுமை இலக்கியத்தில் ஈடுபாடும்
கொண்ட சி. கனகசபாபதி புதுக்கவிதை பற்றி ‘எழுத்து’ இதழ்களில் விரிவான கட்டுரைகள்
எழுதினார். ‘எழுத்து’ ஐந்தாம் ஆண்டில் (1963) இவை பிரசுரமாயின.

     ‘காட்டு வாத்து’ தொகுதி பற்றியும் ந.பி. யின் கவிதைத் திறன் பற்றியும் அவர் ‘புது
மனிதனுக்குப் பாடும் பழமை வழி வந்த புதுயுகக் கவிஞன்’ என்ற தலைப்பில் நீண்ட
கட்டுரை ஒன்று எழுதினார்.
 

(எழுத்து ஏடு 49)


     ‘இன்றைய மனக்குரல் வகைக்கு ஏற்ப ஒலிக்கும் புதுக்கவிதைகளின் தொகுப்பை
விமர்சித்து அவர் எழுதிய கட்டுரை எழுத்து 51-வது ஏட்டில் வந்தது.

     ‘கவிதை கதையாக இருந்திருக்கிறது. வரலாறாக இருந்திருக்கிறது மனத்தின் குரலாக
அதிகம் இருந்ததில்லை. மனத்தின் நுட்பமான அசைவுகளை’ வெளியிடும் முயற்சியே புதுக்
கவிதை, என்ற ந. பிச்சமூர்த்தியின் கருத்துக்கு விளக்கமும் விரிவுரையுமாக அமைந்திருந்தது
கனகசபாபதியின் ஆய்வு.

     காலந்தோறும் கேட்கும் குரல் வகை புதியது. ஒரு காலத்துக் குரல் வகை போல்
அடுத்த கால, அதற்கு முன் காலக்குரல் வகை இருப்பதில்லை. சங்க காலம், சங்கம் மருவிய
காலம் என்றவாறு காலப்பாகுபாடு செய்து கொண்டு பார்த்தால் அவ்வப்போது புதுப் புதுக்
குரல்வகை கேட்டது அகச்செவியில் படும்.

     ‘தமிழ்க் கவிதையின் குரல் வகையில் இம்முறையில் அறிய வேண்டியது அவசியம்.
உள்ளடக்கம் பற்றிய குரல் வகைகளையே இங்கு நான் உரக்கச் சிந்திக்கிறேன். சங்க காலக்
கவிதை காதலும் வீரமும் பற்றியே உரைக்கிறது. சங்கம் மருவிய காலத்தில் காதலுக்குப்
பதில் கற்பும், போர் வீரத்திற்குப் பதில் கருணை வீரமும் மனத்துக்கினிய நயத்துடன்
கவிதையில் ஒலியலை எழுப்புகின்றன.

     ‘இவ்வாறு சங்க காலக் கவிதைக்கும் சங்கம் மருவிய காலக் கவிதைக்கும் இடையே
குரல்வகையில் வேற்றுமை ஏற்பட்டது ஏன்? சமூக வாழ்வில் கட்டுப்பாடுகள் காலப்போக்கில்
ஆட்சிக் கரங்களை நீட்டியதே காரணம் என்று சொல்ல வேண்டும். இந்த ஆதிக்
காவியங்களின் காலத்திற்கு முன்பே திருக்குறளில் சங்க காலக் கவிதையில் கேட்காத
ஒழுக்க ரீதியின் புதுக்குரல் ஒலித்ததை நாம் இன்றும் கேட்கமுடிகிறது.