பக்கம் எண் :

119  வல்லிக்கண்ணன்

     ஆதிக் காவிய காலத்தை அடுத்து, மேன் மேலும் சமூகக் கட்டுப்பாடுகள்
ஆதிக்கக்கரங்களை நீட்டிய காலத்தில் திருக்குறளைப்போல் சில நீதி நூல்கள் ஒழுக்க
நீதிப் புதுக்குரலில் மேலும் உரக்கப் பேசினதை நாம் கேட்கலாம். இக்காலத்தை அடுத்து
பக்தி இயக்கக் காலத்தில் பக்திக் கவிதை கடவுளைப் பற்றிய புதுக்குரல் இசைத்தது. அதற்கு
முன் கடவுளைப் பற்றிப் பாடல்கள் பாடப்பட்டாலும் இக்காலத்தில் போல உள்ளுணர்வுடன்
உண்மை வேகத்துடன் ஆனந்த பாவத்துடன் பாடப் படவில்லை என்பதால் இக்காலத்தின்
பக்தி வகையின் குரல் வகை புதியது என்று உணரலாம். இதற்குப் பிந்திய காவிய காலத்தில்
கடவுளுக்குப் பதில் கடவுள் தன்மை பற்றி புத்தம் புதுக்குரல் எழுந்ததை இன்றும் நாம்
கேட்கிறோம். கம்பன் காவியமே இதற்குச் சான்று. கம்பராமன் மலர்களால் அர்ச்சிக்கப்படும்
கடவுளாகத் தோன்றுவதைக் காட்டிலும் கவிதைச் சித்திர மலர்களால் உருவாக்கப்படும்
கடவுள் தன்மை குடிவாழும் மனிதனாகக் காண்பதால் இதைத் தெளியலாம். இது அல்லாமல்
காவிய காலக் கவிதையின் குரல் வகையில் முன்னை விடவும் சமுதாய பொதுமைக் குரலும்
இழைந்துள்ளது என்றும் சொல்ல வேண்டும்.

     ‘பின்னர் சாத்திர வளர்ச்சிக் காலத்தில் கவிதையின் குரல் வகை மாறியது. மேல்
உலக இயல் பற்றிய புதுக்குரலே அது என்று குறிக்கலாம். இவ்வாறே பார்த்துக் கொண்டே
வந்தால் சித்தர்கள் காலக் கவிதையில் ஞானக்குரலும், பாரதி கவிதையில் புத்தம் புதியதான
தேசமும் விடுதலையும் பற்றிய குரலும், ஒன்றை விட்டு மாறி இன்னொன்றாக ஒலித்ததை
நாம் கேட்கலாம். பாரதியின் தேசீயப் புதுக்குரலில் ஆன்ம சக்திக் குரலின் இழைவும்
உண்டு. பாரதிக்குப்பின் வாழ்வின் ஒரு புதுக்காலத்தில் இருக்கிறோம்’. இன்றைய
புதுக்கவிதையின் குரல் மனத்தின் குரல். இதற்குமுன் என்றைக்குமே மனத்தின் குரல்
கவிதையில் கேட்டதில்லை. மேலும் இன்றைய புதுக்கவிதையின் குரலில் மனிதனைப்
பற்றியும் கேட்பதை உணரலாம். பிராய்டும் கார்ல்மார்க்ஸும் கொடுத்த கொள்ககைகளே
இதற்குக் காரணம். (கனகசபாபதி கட்டுரையிலிருந்து)

     இக்காலத்திய மனித மனங்களின் குரல்எப்படி எப்படி இருக்கிறது என்பதையும்
விமர்சகர் சி.கனகசபாபதி நன்றாக அளவிட்டுச் சொல்லியிருக்கிறார் அந்தக் கட்டுரையில்.

     ‘மனத்தை ஊறுகாய் போட்டுப் புளிக்க வைக்கும் காலம் இது. கண்டது கடியதை
விரும்பி நிரப்பி மனவீட்டை பாழ்படுத்துவோரும், திறந்த மனம் என்று பேசிக்கொண்டு
மூடித்தெரியாதவரும், பரம்படித்துப் பண்படுத்தாத மனம் என்னும் தரிசான பொட்டல்
வெளி கொண்டவரும், மனத்தின் அடிக்கல் நட்டுவைக்காமல் மேற்கட்டிடமும் பூச்சும்
பெற்று உலா வருவோரும், மனம் திண்டாடித் திகைத்துத் தெருவில் நிற்பவரும் நம்மில்
நிறைந்திருக்கக் காலம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், மனம்
போன போக்கு மனநோய் கவ்விப் பிடித்திருக்கின்றன. விஞ்ஞான எந்திரத் தொழில்
வளர்ச்சி நூற்றாண்டை. நிகழ் நொடி வாழ்வின் நரம்பில் செவ்விதும் அபத்தமும் சுரங்களாக
அடுத்தடுத்து ஒலிக்கின்றன. கூர்பற்களுடன் சுழலும் எந்திரச் சக்கரத்தின் இடையே
அகப்பட்ட பட்டுப்பூச்சி போல்