பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 12

  வாசித்துக் கொண்டு போகிறான்.”  
 
     பாரதியின் வசனகவிதை முயற்சிகளும் ‘பொருள் நிறைந்த சிறிய சிறிய
வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவதும்’ பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக’ வாசிப்பதும் ஆகத்தான் அமைந்துள்ளன.
 
     இந்த விதமான ‘வசனகவிதைப்’ படைப்பில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை
பாரதிக்கு ஏன், எப்படி ஏற்பட்டிருக்கக் கூடும் என்று இன்று சர்ச்சை செய்வது
சுவாரஸ்யமான யூகங்களுக்கே இடமளிக்கும். எனினும், பேராசிரியர் பி.மகாதேவன்
கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அபிப்பிராயமாகவே தோன்றுகிறது.
 
     பாரதி ரவீந்திரநாத் தாகூருடன் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டினார்; தாகூரின்
‘கீதாஞ்சலி’ மாதிரி அவரும் இதை எழுதினார் என்று மகாதேவன் சொல்லியிருக்கிறார்.
 
     தாகூரின் ‘கீதாஞ்சலி’ முதலிய படைப்புகளை ரசித்த பாரதி அவற்றைப்போல் வசனகவிதை படைக்க முன்வந்திருக்கலாம். அக்காலத்தில் அவருக்கு வால்ட் விட்மனின்
‘லீவ்ஸ் ஆவ் கிராஸ்’ பாடல்களும் அறிமுகமாகி இருந்தன. மேலை நாட்டு நல்ல
கவிஞர்களின் திறமையை அறிந்து கொள்ளத் தவறாத பாரதி விட்மனையும் அறிமுகம்
செய்து கொண்டிருந்தார். இதற்கு பாரதியின் கட்டுரையில் சான்று கிடைக்கிறது. வால்ட்
விட்மன் பற்றி பாரதி இவ்வாறு எழுதியிருக்கிறார்- “வால்ட் விட்மன் என்பவர் சமீப
காலத்தில் வாழ்ந்த அமெரிக்கா (யுனைட்டெட் ஸ்டேட்ஸ்) தேசத்துக்கவி. இவருடைய
பாட்டில் ஒரு புதுமை என்னவென்றால், அது வசனநடை போலேதான் இருக்கும். எதுகை,
மோனை, தளை ஒன்றுமே கிடையாது. எதுகை மோனையில்லாத கவிதைதான் உலகத்திலே
பெரிய பாஷைகளில் பெரும் பகுதியாகும். ஆனால், தளையும் சந்தமும் இல்லாத கவிதை
வழக்கமில்லை. வால்ட் விட்மான், கவிதையை பொருளில் காட்ட வேண்டுமே யல்லாது
சொல்லடுக்கில் காட்டுவது பிரயோஜனமில்லை யென்று கருதி ஆழ்ந்த ஓசை மாத்திரம்
உடையதாய் மற்றப்படி வசனமாகவே எழுதிவிட்டார். இவரை ஐரோப்பியர், காளிதாஸன்,
கம்பன், ஷேக்ஸ்பியர், மில்டன், தாந்தே, கெத்தே முதலிய மகாகவிகளுக்கு ஸமான
பதவியுடையவராக மதிக்கிறார்கள். குடியாட்சி, ஜனாதிகாரம் என்ற கொள்கைக்கு மந்திர
ரிஷிகளில் ஒருவராக இந்த வால்ட் விட்மானை ஐரோப்பிய ஜாதியார் நினைக்கிறார்கள்.
எல்லா மனிதரும், ஆணும் பெண்ணும் குழந்தைகளும், எல்லாரும் ஸமானம் என்ற
ஸத்யத்தை பறையடித்த மஹான்களில் இவர் தலைமையானவர்.”
 
    (பாரதி கட்டுரைகள்: ‘சமூகம்-நகரம்’)
 
     புல்லையும் மண்ணையும் நீரையும் மனிதர்களையும் நாடுகளையும் உற்சாகத்தோடு
பாடிப் பெருமைப்பட்ட விட்மனைப் போல பாரதியும் காற்றையும் கயிற்றையும் மணலையும்
விண்ணின் அற்புதங்களையும் மண்ணின் மாண்புகளையும் போற்றி, ‘பொருள் நிறைந்த
சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கி’ தர்க்கித்துக் கொண்டு போக விரும்பியிருக்கலாம்.
பாரதத்தின் பழங்கால ரிஷகளைப் போல, உபநிஷத்