பக்கம் எண் :

13  வல்லிக்கண்ணன்

கர்த்தாக்களைப் போல பாரதியும் ஒளியை, வெம்மையை, சக்தியை, காற்றை, கடலை,
ஜகத்தினைப் போற்றிப் புகழ இப்புதிய வடிவத்தைக் கையாண்டிருக்கலாம்.

     அது எவ்வாறாயினும், தமிழுக்குப் புதிய வடிவம் ஒன்று கிடைத்தது. பாரதியின்
வசனகவிதை இனிமை, எளிமை, கவிதை மெருகு, ஓட்டம் எல்லாம் பெற்றுத் திகழ்கிறது.
இதற்கு ஒரு உதாரணமாகப் பின் வருவதைக் குறிப்பிடலாம்.
 
  “நாம் வெம்மையைப் புகழ்கின்றோம்,
     வெம்மைத் தெய்வமே ஞாயிறே, ஒளிக்குன்றே,
அமுதமாகிய உயிரின் உலகமாகிய
     உடலிலே மீன்களாகத் தோன்றும்
விழிகளின் நாயகமே
     பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே,
வலிமையின் ஊற்றே, ஒளி மழையே, உயிர்க்கடலே,
     சிவனென்னும் வேடன் சக்தியென்னும்
குறத்தி உலகமென்னும் புனங்காக்கச்
     சொல்லி வைத்து விட்டுப் போன விளக்கே,
கண்ணனென்னும் கள்வன் அறிவென்னும்
     தன்முகத்தை மூடி வைத்திருக்கும்
ஒளியென்னும் திரையே.
     ஞாயிறே, நின்னைப் பரவுகின்றோம்.”
(ஞாயிறு புகழ்)
 
     இது வெறும் வசனம்தானா? இல்லை, இது கவிதைதான் என்று எப்படிச் சொல்ல முடியும்?
 
     வசனத்தின் வறண்ட, அறிவு பூர்வமான சாதாரண இயல்பை மீறியது. கவிதையின்
தன்மையைப் பூரணமாகப் பெறாதது. எனவேதான் ‘வசனகவிதை’ என்று பெயர் பெறுகிறது.
 
     பாரதி காட்டும் ‘காட்சி’களின் பல பகுதிகள் கவிதை ஒளி பொதிந்த சிறு சிறு
படலங்களாகவே திகழ்கின்றன. ஆயினும் அவை கவிதை ஆகிவிடா. ‘வசனகவிதை’ எனும்
புதிய வடிவத்தின் ஜீவனுள்ள சித்திரங்கள் அவை. திரும்பத் திரும்பப் படித்துச்
சுவைப்பதன் மூலம் அவற்றின் நயத்தையும் உயர்வையும் தனித்தன்மையையும்
உணரமுடியும்.