பக்கம் எண் :

121  வல்லிக்கண்ணன்

இவ்வாறு சிந்தித்து உண்மை ஒளியைக் காண முயல்கிறது மனசு.
 
  காலம் என்ற ஒன்று
யாளியின் வாய்க்குள்
விரலுணர
ஓசையெழ உருண்டோடும்
கண்ணுக்குப் படாத
கல் பந்து
குறையாத ஜாடியினின்று
நிறையாத ஜாடிக்குள்
பார்வைக்குத் தெவிட்டாமல்
வில்லாய் வளைந்து விழும்
விழுந்து கொண்டேயிருக்கும்
கட்டித்தேன் பெருக்கு.
தரைக்கே வாராது
காற்றோடு மிதந்தோடும்
பூப்பந்து.
கிணற்றினுள்ளே
கண்ணுக்குப் புலனாகும்
நதியின் பிரவாஹம்.
தேயாததை யெல்லாம்
தேய வைத்து,
தேய்மானம் ஒன்றே
தேயாதது என்று
தேய்த்தும் தேயாது
கோலோச்சும்
தேய்மானத் தத்துவம்,
எனக்கோ,
கடவுள் அளித்த ரஜா,
மரணவூரில்
ஆஜராகி வேலை ஏற்க
யான் பெற்ற
காலாவதி
மணியின் முள்ளில் காலமில்லை
அக்னியைத் தேடி
அலைந்த மனசோ
அடுப்பாய்ப் புகையுது.
 
     பிச்சமூர்த்தி எழுதிய ‘வழித்துணை’ எனும் நெடுங்கவிதை 53 வது ஏட்டில்
பிரசுரமாயிற்று. ‘புதுக்கவிதையில் இன்னொரு மைல்கல்’ என்று இதை வரவேற்று ‘எழுத்து’
அதே இதழில் தலையங்கம் தீட்டியுள்ளது. ‘அறிவு வார்ப்பான புதுரகப் படைப்பு’ என்று
சி.கனகசபாபதி இதை விவரித்தும் விமர்சித்தும் தனிக்கட்டுரை எழுதினார். (எழுத்து 52)