பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 124

     விஞ்ஞான உண்மையை நயமான கவிதையாக்கிக் காட்டுகிறது. நா. வெங்கட்ராமனின்
‘அந்தி’ எனும் படைப்பு.
 
  துயிலும் முன் பரிதி
தூக்கி யெறிந்த
வெள்ளை வெற்றிலைக் காம்புகளை
ஆகாசத் தூசுக்கும்பல்
பொறுக்கி
மென்று
உமிழ்ந்த
எச்சில்
 

(எழுத்து 65)

     கவிதையில் காலாகாலமாகக் கையாளப்பட்டு நைந்து போன விஷயத்துக்குக் கூடப்
புதுமை சேர்க்க இயலுமா என்று புதுக்கவிதை சோதனை செய்யத் தயங்கவில்லை; நிலவு
இம்முயற்சிக்கும் கை கொடுக்கிறது.

     ‘கிணற்றில் விழுந்த நிலவு’ என.எஸ்.வைதீஸ்வரன் எழுதியதையும் நிலவை
கற்புக்கரசியாகக் கண்டும், நாணமிலாப் பரத்தையாகக் கொண்டும் தி.சோ. வேணுகோபாலன்
ஒட்டும் வெட்டுமாக இரு கவிதைகள் படைத்ததையும் முன்னரே குறிப்பிட்டுள்ளேன். வேறு
கோணங்களிலும் நிலவைப் பார்க்கிறார்கள் சிலர்.
 
  விட்டெறிந்த இட்டலியோ
கட்டிவைத்த பழஞ்சோறோ
கொட்டி விட்ட கப் தயிரோ
சுட்டு வைத்த அப்பந் தானோ?
என்ன இழவேயானாலும்
எட்ட இருந்து சிமிட்டுது கண்
கிட்ட வந்து எட்ட வில்லை
பாடுபட்ட பாட்டாளி
கொட்டாவி விடுகின்றேன்
ஆவ்.......
உறக்கம் வருது பசிமறக்கும்.
     இ. அண்ணாமலை என்பவரின் நோக்கு இது. (எழுத்து 66-67) சி. மணி காணும்
தோற்றம் வேறு ரகமானது.
 
  நல்ல பெண்ணடி நீ!
முகத்திரை இழுத்து விட
இரண்டு வாரம்
அதை எடுத்து விட
இரண்டு வாரம்
இதை விட்டால் வேறு
வேலையே இல்லையா உனக்கு?
 
என்று நிலவைப் பார்த்துக் கேட்கிறார் அவர். (எழுத்து 68)