பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 148

என்ன செய்வது? ‘கனவு-செல்வம் மங்கை இளமை’.

     வசதியோடும் வளங்களோடும் வாழ ஆசைப்பட்டும் வாழ முடியாது தவிக்கும் ஒரு
அப்பாவி மனிதனின் அனுபவ உணர்வுகளை விரிவாய், அழகாய் விவரிக்கும்
‘வரும்போகும்’ கவிதையிலும் சி. மணி நயமான புதுமையான உவமைகளைக்
கையாண்டிருக்கும் திறமை ரசித்துப் பாராட்டத் தகுந்ததாகும்.

     இவரது மற்றொரு நெடுங்கவிதையான ‘பச்சையம்’ நோக்கும் தொனியும் வேறு
ரகமானது.

     ‘பாலுணர்ச்சி’ கூட்டி பச்சையாக எழுதுகிறார் கவிஞர் என்ற குற்றச்சாட்டுக்கு சி.மணி
கூறும் எதிர்ப்புதான் ‘பச்சையம்’ என்ற நெடுங்கவிதை அவருடைய சீற்றம் உணர்ச்சி
வேகத்தோடு கவிதை உருவம் பெற்றிருக்கிறது.

     எழுத்திலே பாலுணர்ச்சி கூடாது, அது பச்சை என்று சொல்கிறவர்கள் யார்?
 
  வாலை இளநீரை வாய்விழியால்
வாரிப் பருகும் இவர்கள்
இளமை கொடுக்கும் துணிவில்
இடித்துக் களிக்கும் இவர்கள்
வயது வழங்கிய வாய்ப்பில்
அமர்ந்து சிலிர்க்கும் இவர்கள்
இருவரைக் கட்டிலேற்ற ஊதி
முழக்கி ஊர் கூட்டும் இவர்கள்
இருளில் ரகசியமாய் வெட்கி
மருவி மயங்கும் இவர்கள்
பிறகு தவழ விட்டு ஊரெல்லாம்
பெருமை உரைக்கும் இவர்கள்
எல்லாம் இவர்கள்தான் - வேறு யார்
சொல்வார்கள்? கூடாதாம்; பச்சையம்!
 
     எழுத்திலே பச்சை என்றால், எழுத்தாளன் மனசிலே பச்சை என்றாகுமா? நாடகத்தில்
பாத்திரங்கள் பேச்செல்லாம் ஆசிரியர் பேச்சா? ‘நரகம் எனது நரகமா. நரகத் தலைவன்
நரகமா என்றெல்லாம் கேட்டுவிட்டு, கவி சொல்கிறார்.
 
  பலவகை ஆறுகள்
எனக்குள் இருக்கும் கடலில்
கலக்கும்; எழுபவை கடல் முகில்,
அருவிக்கு வெறுப்பில்லை
வருவோரைக் குளிப்பாட்டும்.
காற்றுக்குத் தடுப்பில்லை
காற்றெங்கும் புகுந்து விடும்,
நீயிழுத்த காற்றணுக்கள்,
நானிழுத்த காற்றணுக்கள்;
கதிரொளிக்கும் மறைப்பில்லை;
கதிரொளியில் பச்சையில்லை;
படைக்கின்றேன் பச்சையத்தால்.