பக்கம் எண் :

149  வல்லிக்கண்ணன்

     ‘நடப்பில் நிகழ்வது படைப்பில்’ இடம்பெறும்: ‘நடப்பில் நிகழ்வது’ என்ன?
 
  பற்பசையில் முத்துச்சரம்
எண்ணெயில் தாழ்கூந்தல்
செருப்பில் மலரடி
உடையில் சிலையுரு
பௌடரில் பட்டழகு
சோப்பினில் நட்சத்திரம்
விற்றிடுவாள் விளம்பரத்தால்
முலைக்கோண வலைக்குமரி.
 
     இப்படிப் பல நிகழ்ச்சிகள் சுவையாகச் சித்திரிக்கப்படுகின்றன. இலக்கியத்திலிருந்து
பற்பல வரிகள் நினைவு கூரப்படுகின்றன. இவ்வாறு ‘இச்சைக்கு வழிபாடு’ எங்கும்
எப்போதும் நடை பெறுவது சுட்டிக்காட்டப்படுகிறது. உடலில் உப்பு மாதிரி ‘கவர்ச்சிக்
கலப்பு’ நிறைந்து காணப்படுகிறதே!
 
  ஆற்றல் இழந்த கடவுளர்
சாலையில் காட்சிப் பொருளாகிப்
பெற்றனர் அழகியல் போற்றல்
பக்தி மலருக்குப் பதிலாய்.
அறிவியல் இக்கையில் பறித்துப்
பறித்ததை நீக்கி மகிழக்
குவித்தது அக்கையில் பல பொருள்;
முன்னேற்றம், நைலக்ஸ், சினிமா
இறைவனை விட்டபின், மற்றது
பிறப்பு மர்மம் ஆண் பெண்
பிணைப்பு மர்மம் ஒன்றுதான்,
நாயக நாயகி
பக்தி போனதும்
தலைவன் தலைவி
சித்தி வந்தது.
கோவில் போனதும்
கொட்டகை வந்தது;
கடவுள் போனதும்
நட்சத்திரம் வந்தது.
டும் டும் டும்.
 
     ‘காண்பது நோக்கைச் சார்ந்தது; உண்மை. ஆனால் நம்முள் ஐந்துக்கு மேலோடி
வழிசெய்யும் ஆறுண்டு. எதுவும் தவறாது மூளையில் பதியும் என்பது உளவியல்’.

     ‘இயற்கைப் புணர்ச்சி வழங்கிய காலம்’ ஒன்று இருந்தது. குலத்திணைக் கூறிடா
நிலத்திணைக் காலம் அது, உளமொன்றும் காதலர் உடலொன்றி வாழ்ந்தனர்.

     பிறகு, நிலத்திணை மங்கி, குலத்திணை ஓங்க ‘செயற்கைப் புணர்ச்சி’ நினைப்பிலும்
பாடலிலும் தலைகாட்டியது.