பக்கம் எண் :

151  வல்லிக்கண்ணன்

பிந்திய விளைவுகள்

    
     புதுக்கவிதை தரமான வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டிருந்த போதே- அந்தக்
காரணத்தினாலேயே - அதற்கு எதிர்ப்பும் கிண்டலும் எழுத்தாளர்கள் மத்தியிலும்
பத்திரிகையிலும் மீண்டும் தலை காட்டின 1966-67ல்.

     ‘தீபம்’ பத்திரிகை மாதம் தோறும் ‘இலக்கிய சந்திப்பு’ நடத்திய எழுத்தாளர்களிடம்
‘புதுக்கவிதை பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்வியைத் தவறாது கேட்டுவந்தது.
பேட்டி அளித்த இலக்கியவாதிகளும் புதுக்கவிதையைக் குறை கூறியும், யாப்பில்லாக்
கவிதை எழுதுகிறவர்களைத் தாக்கியும் கண்டித்தும் தங்களது மேலான அபிப்பிராயங்களை
அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

     அவ்வாறு கருத்துக் கூறியவர்களில் எழுத்தாளர் கு.அழகிரிசாமி
புதுக்கவிதைக்காரர்கள் பற்றி முரட்டடியாக அபிப்பிராயம் தெரிவித்திருந்தார். ‘நான் பார்த்த
புதுக்கவிதைகளை எழுதியவர்களுக்குக் கவிதையைப் பற்றி மட்டுமல்ல, பொதுவாக
இலக்கியத்தைப் பற்றிக் கூட எதுவும் தெரியாது என்பேன். இனி மேலாவது இவர்களுக்கு
இலக்கிய அறிவைப் புகட்டமுடியும் என்ற நம்பிக்கையும் கூட இவர்கள் இவரை
அளிக்கவில்லை.இவர்களைத் திருத்த முயல்வது வீண் வேலை’ என்று அவர்
குறிப்பிட்டிருந்தார்.

     ‘தாமரை’யும் புதுக்கவிதையின் போக்கைக் குறைகூறி எப்போதாவது கட்டுரைகள்
வெளியிட்டுக் கொண்டிருந்தது.

     அதே சமயத்தில், இப்பத்திரிகைகள் புதுக்கவிதையைப் புதுப்படைப்பாகவோ மொழி
பெயர்ப்பாகவோ பிரசுரிக்கத் தயங்கவுமில்லை.

     சென்னையில் நிகழ்ந்த இலக்கியக்கூட்டங்களும் புதுக்கவிதை மீது தனிக் கவனம்
செலுத்தி வந்தன.

     இதனால் எல்லாம், ஜனவரி 1967ல் தனது 97வது ஏட்டின் தலையங்கத்தில் ‘எழுத்து’
பெருமையுடன் குறிப்பிட நேர்ந்தது-

     ‘புதுக்கவிதை நிலைத்துவிட்டது. புதுக்கவிதை என்பதுக்குப் பதில் தற்காலக் கவிதை
என்றே இனி நாம் குறிப்பிடலாம். தமிழை முறையாகப் படித்தவர்கள் யாப்பிலக்கணம்
அறிந்தவர்கள் உள்பட புதியவர்களின் கவிதைகள் எழுத்துக்கு முன்னைவிட அதிகமாகக்
கிடைக்கின்றன...

     சரி. கவிதைகள்பெருகினால் போதுமா, கவிதைகளை ரசிக்கச் செய்ய? போரில்
எதிராளியிடமிருந்து இடத்தைப் பிடித்துவிட்ட பின் அடுத்து செய்ய வேண்டிய வேலை,
பிடித்த இடத்தை ஆர்ஜிதப்படுத்திக் கொள்வதுதான். அதுக்குப்பின் தான் மேலே
முன்னேற்றம். அதேபோல் இலக்கிய சோதனை முயற்சிகள் செய்து வரவும், செய்த
அளவுக்கு கணிப்பு செய்வது அடுத்த வேலை’.