| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 152 |
அந்த இதழ்முதல் சி. கனகசபாபதி ‘பாரதிக்குப் பின் தமிழில் புதுக்கவிதை’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. அதே இதழில் ‘லகுகவிதை’ என்ற கட்டுரையும் இடம் பெற்றது, அது பூரணமாக நினைவு கூரத் தகுந்தது. “வெர்ஸ் லிப்ரே என்று பிரெஞ்சு மொழியிலும், ஃப்ரிவெர்ஸ் என்று இங்கிலீஷிலும் கூறப்படுவதின் தமிழ் அர்த்தம் லகுகவிதை சென்ற நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த ஜூல்ஸ் லாஃபோர்க் (1860-1887) தான் இந்த வெல்ஸ் லிப்ரே அமைப்பை பிரெஞ்சு மொழியில் கையாண்டவர். அது பின்னால் எஸ்ரா பவுண்டு, டி.எஸ். எலியட் போன்றவர்களால் இங்கிலீஷில் கையாளப்பட்டது. நம் தமிழிலும் இந்த முறைக் கவிதைகள் நிறைய வெளிவந்திருக்கின்றன. ஆனால் மற்ற மொழிகளில் அவ்வப்போது இந்தவித முயற்சிகளுக்கு எதிர்ப்பும் கண்டனமும் இருந்தது போலவே தமிழிலும் இன்று காணப்படுகிறது. திட்டவட்டமானதாக கருதப்படும் யாப்பு உருவத்துக்கு மீறிச் செய்வது அடாத செயலாகக் கருதப்படுகிறது. இன்னும் ஏதோ தமிழ் கவிதை ஒன்றுக்குத் தான் மரபான, சத்தான யாப்பு இலக்கணம் இருப்பது போலவும், உலகில் மற்ற மொழிகளுக்கு அப்படி எதுவும் இல்லாதது போலவும் நினைப்பு. எந்த ஒரு மொழி இலக்கியக் கவிதைக்கும் தன் தனக்கென யாப்பு அமைதி இருக்கத்தான் செய்கிறது. லாஃபோர்க்கைப் பற்றிக் கூறும்போது, அவர் மரபான கவிதை உருவத்தை பெயர்த்து எறிந்து விட்டார் என்றும், ‘சின்டாக்ஸ்’ என்கிறோமே சொற்புணரிலக்கணம், அதை சின்னா பின்னம் செய்து விட்டார் என்றும், துணிச்சலோடு அன்றைக்கு பழக்கத்தில் இருந்த சொற்களைப் புகுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது. இதே மாதிரி தான் எலியட், பவுண்டு போன்றவர்கள் இங்கிலீஷ் மொழியில் செய்தார்கள். ஆக, புதுக்கவிதை முயற்சி, தற்கால கவிதைப் போக்கு, தமிழில் செய்யப் படுகிறபோது ஏதோ புனிதம் கெடுக்கும் காரியமாக கருதுவது அர்த்தமற்றதாகும். உலக கவிதை மரபு அறிந்து செய்கிற காரியம். ஆகவே இந்த லகு கவிதை பற்றிய சில கருத்துக்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அமி லோவல் என்பவர். ஆயிரத்து தொளாயிரத்தி பத்துக்களில் இயங்கிய படிம இயக்கத்தில் சம்பந்தப்பட்டவர். அவருடைய கருத்து இது; ‘இலகு கவிதை என்பது பேசும் குரலின் ஒலி நயத்தின் அடிப்படையில் அமைக்கப்படுவது. திட்டமிடப்பட்ட சந்த அமைப்பை கடைப்பிடித்து உருவாக்குவது இல்லை. நம் சுவாசத்துக்கு ஏற்பவும் இருக்கும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை ஒட்டியே டி.எச். லாரன்ஸ் சொல்கிறார்; ‘ ஒலி நயம் என்கிற போது அகலமான இறக்கைகள் கொண்ட ஒரு பறவை வானில் பறந்தும் சறுக்கியும் வழுக்கிப் போவதையுமே நான் நினைக்கிறேன். எல்லாம் நாம் எடுத்துக் கொள்ளும் ஒரு நிறுத்தல், ஓய்வு, உணர்ச்சிக்கு ஏற்ப குரல் சுதாவாக இழுபடுவதைப் பொறுத்துத்தான் இருக்கிறது. கவிதையை ஆக்குவது துலக்கமாக உள்ள உருவம் இல்லை. உள்பொதிந்து மறைந்து நிற்கும் உணர்ச்சிப் பாங்குதான். | | |
|
|