லாரன்ஸ் சிறந்த புதுக் கவிதைக்காரர்களுள் ஒருவர். அவரது ‘பாம்பு’ என்ற கவிதை மிகச் சிறப்பாக கருதப்படுவது. அவரைப் போலவே டி.எஸ். எலியட்டும் ஒரு கவி. அவர் கூறுகிறார். ‘உருவத்திலிருந்து விடுதலை பெறுவது தான் லகு கவிதை என்றால் ஒரு மட்டமான கவிதான் அதை வரவேற்பான். அது செத்துப்போன, ஒழிந்த, உருவ வகைக்கு எதிரான ஒரு கலகம். புதிய உருவத்துக்கான ஒரு ஆயத்தம், அல்லது பழசை புதுப்பிப்பது ஆகும். வெளித் தோற்றமான ஒரு ஒருமிப்பு ஒரே மாதிரியாக இருக்கும். அதுக்கு எதிராக உள்ளமைந்த ஒருமிப்பைத்தான் இது வலியுறுத்தும். இந்த உள்ளார்ந்த ஒருமிப்பு ஒவ்வொரு கவிதைக்கு தனி விதமானது’. ‘பாழ்நிலம்’ என்ற தன் சிறந்த கவிதை உள்பட புதுக் கவிதைத் துறையில் தலைசிறந்த சாதனை காட்டியுள்ளார் எலியட். அவரைப் போலவேதான் எஸ்ராபவுண்டும். அவர் கூறுகிறார்; ஒருவர் எழுதித்தான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படுகிற போதுதான் ஒருவர் லகு கவிதை எழுத வேண்டும்; அதாவது தீர்மானிக்கப்பட்ட சந்த முறைகளால் முடிவதை விட அதிக அழகுடன் ஒரு ஒலி நயத்தை பொருளை (கவிதை உள்ளடக்கம்) ஏற்றிக் காட்டமுடிகிற போதுதான். அல்லது விதிமுறையான, மாறாத, ஒலிக்குறி கொண்ட செய்யுளின் அளவை விட அதிக இயல்பானதாக, பொருளின் உணர்ச்சித் தன்மையின் பகுதியாக அதிகம் இருக்கும், அதிக பொருத்தமானதாக உற்றதானதாக அர்த்தம் சொல்லத்தக்கதாக இருக்கிறபோதுதான்.’ எஸ்ரா பவுண்டு தன் ‘கேன்டோ’ கவிதைகள் மூலம் புதுக்கவிதைகளை சிறப்பாக்கியவர். இப்படி லகு கவிதை பற்றி அந்தத்துறையில் சாதனை காட்டியவர்களே கூறி இருப்பதை நாம் பார்க்கிறபோது இந்த முயற்சி ஏதோ யாப்பு தெரியாமல் எழுதப்படுவது என்பதில்லை, யாப்பை மீறவேண்டும் என்பதுக்காக செய்யப்படவில்லை என்பதும் தெரியவருகிறது. லகு கவிதை எழுதுபவர்களுக்கு ரொம்ப நுண்ணுணர்வுள்ள செவி தேவையாகும். நல்ல வேலை செய்ய விரும்புகிறவனுக்குத்தான் லகு கவிதை சாத்தியம். லகு கவிதையின் ஊடேயும் எளிமையான ஒரு சந்தப்போக்கின் சாயல் பதுங்கிச் சென்று கொண்டிருக்கும். புதுக்கவிதை வாசகர்கள் இவைகளை மனதில் கொண்டால் லாபகரமானதாகும்.” (எழுத்து 97) புதுக் கவிதைக்கு எழுந்த எதிர்ப்பின் தன்மையையும், அப்படி எதிர்த்தவர்களின் தன்மையையும் சுட்டிக்காட்டி. அவர்களுக்கு பதில் கூறும் விதத்தில், ‘புதுமை தாங்காத கிணற்றுத் தவளைகள்!’ என்ற கட்டுரை 98 வது ஏட்டில் வெளியிடப்பட்டது. ‘எழுத்து’ ஒன்பதாம் ஆண்டில் வழக்கமாக எழுதிக் கொண்டிருந்தவர்களின் புதுக்கவிதைப் படைப்புகள் இடம் பெறவில்லை. சி. மணியின் கவிதை ஒன்று, வ.க. கவிதைள் இரண்டு. எஸ். வைதீஸ்வரன் கவிதைகள் மூன்று, கி.அ. சச்சிதாநந்தம் கவிதைகள் நான்கு. இவைபோக மற்றவை எல்லாம் புதிய படைப்பாளிகளின் கவிதைகள் தான். ஹரி சீனிவாசன், நீல.பத்மனாபன், பூ. | | |
|
|