பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 156

  பதவி பறிபோகும்;
இந்தக் காலம்!

அன்றவன் அடிமை!
ஆனந்தப் பட்டான்;
இன்று நான் சுதந்திரன்!
சோகப் படுகிறேன்,
சீ! போ!
 
     புதிதாக எழுதத் தொடங்கியிருந்தவர்களில் செல்வி இரா. மீனாட்சியின் கவிதைகள்,
தனிப்பார்வை கற்பனைவளம், இனிய சொல்லோட்டம், கருத்தாழம் முதலிய நயங்களோடு
அமைந்திருந்தன. ஆற்று மணலில் பதியும் கால்தடங்கள், பாய், ஆலம்விழுது,
கோட்டையும் கோவிலும் போன்ற விஷயங்களை புதியகோணத்தில் கண்டு கவிதைகள்
படைத்திருக்கிறார் இவர். ‘ஆடிக்காற்றே!’ என்ற கவிதை குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
 
  ஆடிக் காற்றே வா! வா!
மண் தூவி விதை தூவி
முளை காண விழை காற்றே
என் சொல் கேளேன்.
நெல்லை நாற் புழுக்குறானே
அவனைப் படியில் உருட்டி விடு,
இளைத்தவன் வயிற்றில் சொடுக்குறானே
அவனைக் குழியில் இறக்கி விடு.
மஞ்சள் இதழில் பச்சை கிறுக்குறானே
அவனை பனைமரத்தில் தொங்கவிடு.
உதைத்துக் கொள்ளட்டும்.
துள்ளல் அடங்கட்டும்.
புரட்சிக் காற்றே!
இவற்றைக் காண விழைந்த என் துணை
இதோ, இங்கே நிலப்படுக்கையில்.
எனக்காக-
மல்லிகை மலர்களைத் தூவ மாட்டாயா?
மெல்ல-மெல்லத் தூவு, நோகாமல் தூவு.
 
     அயல்நாடுகளின் கவிதைகள் பல தமிழாக்கப் பெற்று வெளியிடப்பட்டன. வேறொரு
விஷயத்தையும் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். எழுத்து 97 -ஆம் இதழில்
வல்லிக்கண்ணனின் ‘உன் கண்கள்’ வந்திருந்தது.
 
  சூழ்நிலைப் பாலையில்
வாழ்க்கை வெயிலில்
சுற்றித் திரியும்
என் கண்களுக்கு
குளு குளு ஓயாஸிஸ்
ஆயின, அன்பே!
உன்னிரு விழிகள்.