| அலுவல் அலைகளில் எற்றுண்டு இடறி காகிதக் கடலில் புரண்டு தவிக்கும் என் விழிகள் தங்கி இன்புற பசுமைத் தீவாய் உதவும், பெண்ணே! உன் ஒளிக் கண்கள். |
இக் கவிதை தூண்டிவிட்ட விளைவாக, செல்வம் ‘இலக்கியத்தில் கண் வர்ணனை’ என்றொரு ஆராய்ச்சிக் கட்டுரை தயாரித்தார். சங்ககாலக் கண் வர்ணனை, அதைத் தொடர்ந்து 19-ஆம் நூற்றாண்டுவரை பயின்ற கண் வர்ணனை, இந்த இரண்டு காலப் பிரிவுகளுள் கண்ணுவமைகள் எவ்வெவ்வாறு வழங்கின என்ற தொகுப்பு. தற்காலத்தில் கண் வர்ணனை- ‘உன் கண்கள்’ காட்டியபடி என நான்கு பிரிவுகளைக் கொண்ட நீண்ட கட்டுரை இது; ‘எழுத்து’ இதழில் 18 பக்கங்கள் இடம் பெற்றுள்ளது. இக்கட்டுரை செல்வம் என்ற எழுத்தாளரின் பழந்தமிழ்ப் புலமையை, கவிதை ரசனையை, ஆய்வுத்திறமையை நன்கு புலப்படுத்துகின்றது. இந்த இரண்டு வருடங்களில் செல்லப்பா அதிகமாகவே கவிதைகள் இயற்றியிருக்கிறார். பல ரகமான சோதனைகளில் அவர் உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளார். செல்லப்பாவின் கவிதைகளில் ‘மாற்று இதயம்’ எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. இதயத்தை மாற்றிவிட்டு இன்னொருவனின் இதயத்தை வெற்றிகரமாக வைக்கும் சிகிச்சை முதன் முதலாக நடைபெற்ற சமயம் அது. மாற்று இதய சிகிச்சை பற்றிய பேச்சுக்கள் அதிகம் அடிபட்டுக் கொண்டிருந்த காலம். அக்காலத்திய நிகழ்ச்சியால் தூண்டப்பட்டு, செல்லப்பா மாற்று இதயம்’ கவிதையை எழுதியுள்ளார். |
| மாற்று இதயம் வேண்டும் எனக்கு யாரிடம் இருந்து கிடைக்கும் எனக்கு? |
என்று கவி தேடுகிறார். தனது தேவையைத் தெளிவுபடுத்துகிறார், படிப்படியாக. |
| என் இதயத்துக்கு ஒரு சரித்திரம் உண்டு அது பசிக்கு அழுதது, வலிக்கு முனகியது, காதலுக்கு ஏங்கியது, பொருளுக்குத் தவித்தது, உணர்ச்சிக்குத் துடித்தது; அறிவுக்குப் பறந்தது. புரட்சிக்குச் சீறியது; அமைதிக்கு விழைந்தது; புதுமைக்கு எம்பியது; பழமைக்கு உருகியது. |
அவருக்கே ‘போர்’ அடித்துப்போனதால் தான் அவர் மாற்று இதயம் கேட்கிறார். எப்படிப்பட்ட இதயம் வேண்டுமாம் அவருக்கு? |
| அரசியல் வாதியின் இதயம் வேண்டாம் எனக்கு அது தான் இப்போ ரொம்ப மலிவாக இருக்கு; மதவாதியின் இதயம் வேண்டாம் எனக்கு |