பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 160

எழுதியிருக்கிறார். ‘ரஷ்யக் கவியான மயகாவ்ஸ்கி ரஷ்யப் புரட்சித் தலைவன் லெனினைப்
பற்றி 2000 வரிகளில் 1924ல் அவர் இறந்து சில மாதங்களுக்குப் பிறகு எழுதியுள்ள,
கவிதையில் ரஷ்யப்புரட்சி சரித்திரத்தையும் லெனின் சாதனையையும் பிணைத்துத் தன்
பார்வையில் எழுதி இருப்பது போல, தானும் 200 வரிகளில் மகாத்மாவைப் பற்றிக் கவிதை
எழுதியுள்ளதாகவும் செல்லப்பா குறிப்பிட்டிருக்கிறார். ‘ஆசை பற்றி அறையலுற்ற’
செல்லப்பாவின் முயற்சியையும் உயர்ந்த நோக்கத்தையும் சோதனை ஆர்வத்தையும்
பாராட்டத்தான் வேண்டும். நாட்டுக்குச் சுதந்திரம் பெறுவதற்காகத் தன்னை அர்ப்பணித்துக்
கொண்டு, நாட்டு மக்களிடையே விழிப்பு உண்டாக்கி, அவர்களை போராட்டத்தில்
ஈடுபடுத்தி, வெற்றியும் பெற்ற தலைவன், சுதந்திரம் கிடைத்த உடனேயே சுட்டுக்
கொல்லப்பட்டு இருபது ஆண்டுகள் கழிந்த பின்னர் எழுதப்பட்ட இக்காவியம் கோடி
கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மண்ணகத்தில் தர்மம் காக்கப்
போராடியவர்களை நினைவு கூர்கிறது. வேதகாலம், புராண இதிகாசகாலம் எல்லாம் தாண்டி
வரலாற்றின் அண்மை நாட்கள் வரை தொடுகிறது. முத்தாய்ப்பாக,
 
  இவை அத்தனையும் இன்று
பாடப்புத்தக வரலாற்றுக் கதைகள்
மேடைப் பேச்சின் வாய் வீச்சுக்கு
பயனாகும் பழம் பெருமைகள்
தகவல் சாதனை அறியா இளம் தலைமுறைக்கு
வெறும் போட்டோ ஆல்பங்கள்.
 
என்று குறிப்பிடுவது, நயமாக, ரசமாக, அமைந்துள்ளது. காந்தியின் பிரவேசம்,
போராட்டங்கள், விளைவுகள், சுதந்திரம் பெற்றது, ஜனவரி 30 நிகழ்வுகள், காந்தி
மறைந்ததும் பலரும் அறிவித்த கருத்துரைகள், விடுதலை பெற்ற இந்தியாவின் குழப்பங்கள்,
வளம் பெறுவதற்கான திட்டங்கள், சாதனைகள், வேதனைகள், சோதனைகள், மக்களின்
நிலை பற்றி எல்லாம் மிக விரிவாக, 20 பகுதிகளில் (‘எழுத்து’ 20 பக்கங்கள்) 2000
வரிகளில், விவரிக்கப்பட்டுள்ளது, உணர்ச்சிகரமான பகுதிகள், வறண்ட பட்டியல்கள்,
பொறுமையை சோதிக்கும் பகுதிகள், நயமான பகுதிகள் எல்லாம் இக்காவியத்தில் உள்ளன.
இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும், பல நாடுகளின் வரலாற்றிலும் இதே
நிலைமைதான் காணப்படுகிறது என்ற சிந்தனையோடும்.
 
ஒரு வேளை
நெஞ்சுக் குறையுடன் கரைந்த நீ
மீண்டும் எம்மிடை வந்து பிறந்து
இருபதாண்டு இளைஞனாய்
சர்க்கா தத்துவம் தொடர
சத்தியம் அகிம்சை நிலைநாட்ட
சமயத்துக்கு எதிர்பார்த்து
வளர்கிறாயோ எங்களோடு
 
என்ற ஆசை நினைப்போடும் காவியம் முடிகிறது.