இவ்வளவு நீளமாக எழுதவேண்டும் என்று ஆசைப்படாமல் கவிதைக்கு வேகமும் உணர்ச்சியும் அதிகம் கொடுத்து இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்ற எண்ணத்தை இப்படைப்பு உண்டாக்குகிறது. இதில் வறண்ட முறையில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்களை அதிக வலுவோடும் விறுவிறுப்பாகவும் வசனமாகக் கட்டுரை வடிவில் எழுத முடியும் - எழுதியிருக்கலாம்.- என்ற எண்ணம் 1968ல் இதைப் படித்தபோது எனக்கு ஏற்பட்டது. இன்றும் அதே எண்ணத்தைத்தான் இக்காவியம் எனக்குத் தருகிறது. எழுத்து 115-ஆம் இதழில் ‘மெரீனா’ என்ற 444 வரிக்கவிதையை செல்லப்பா எழுதியிருக்கிறார். இதுவும் ஒரு சோதனைப் படைப்புதான். ‘மெரீனா’ சம்பந்தமாக செல்லப்பா குறிப்பிடுவது; ‘பரிபாடல் கவிதைகளை படித்து ரசித்துக் கொண்டிருந்தேன். அதே சமயம் தொல்காப்பியம், யாப்பருங்கல விருத்தி, காரிகை, பன்னிரு பாட்டியல் முதலிய யாப்பு நூல்களையும் உரையுடன் படித்தேன். அதன் விளைவாக பிறந்தது மெரீனா. பரிபாடலுக்கு எல்லை 400 அடிகள் என்று தொல்காப்பிய சூத்திரம் கூறுகிறது. என்னுடையது 444 அடிகள் கொண்டது. மரபை அறிந்து அதை மீற வேண்டிய அவசியம். வருகிறபோது மீறித்தான் ஆகவேண்டும் என்று கருதுபவன் நான். இந்த நீண்ட கவிதையில் என்னெல்லாமோ கையாள முயன்றிருக்கிறேன்’ இலக்கணம் பற்றிய சில குறிப்புகளை தொடர்ந்துஇணைத்திருக்கிறார். இலக்கணம் விதிகளுக்கு உட்படுதல், இலக்கணப் பிழைகள பற்றி எல்லாம் இலக்கணப் பிரியர்கள் குழம்பியும் குழப்பியும் பொழுது போக்கட்டும், கவிதை எப்படி இருக்கிறது என்று கவனிக்கலாம். சென்னை ‘மெரீனா’ கடற்கரையின் வெவ்வேறு நேரக் காட்சிகளை செல்லப்பா இதில் வர்ணிக்கிறார். வெள்ளி முளைப்பதற்கு முந்தியநேரம் முதல் இரவின் கும்மிருட்டுப் படியும் சமயம் வரை, அந்தக் கடற்கரையில் நிகழ்வனவற்றை மிக விரிவாகச் சித்திரிக்கிறார். இந்த முயற்சி பாராட்டுதலுக்கு உரியது. ஆயினும், வலிந்து செய்யப்பட்ட சொல்லடுக்கு வேலையாக இக்கவிதை அமைந்துள்ளது. இயல்பான ஓட்டம் இல்லை. ரசித்து மகிழக் கூடிய சில சில வரிகள் அங்கங்கே தென்படுகின்றன. இதற்குப் பிறகு வந்த மூன்று ‘எழுத்து’ இதழ்களிலும் செல்லப்பா சிறுகவிதைகள் சில எழுதியுள்ளார். ‘ஒலி பெருக்கி’ என்ற கவிதையைக் குறிபிட்டுச் சொல்லலாம். | | இசை அலறும் எரிமலை வாய்; பேச்சு நொறுங்கும் கல்லுடை ரோலர்; ஜவ்வைத் தீய்க்கும் கொல் உலை எஃகுக் கோல் | இது 119 ஆம் இதழில் வெளிவந்தது. இதுதான் கடைசியாகப் பிரசுரமான ‘எழுத்து’ஏடு. (1970ல்) | | |
|
|