பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 164

என்று எழுதுவதும் மரபை மீறுவதல்ல. இதுவும் ஒருவகைச் சித்திர கவிதான். இன்னும்
சொல்லப்போனால், சித்திரக் கவி பெரும்பாலும் இலக்கியக் கழைக்கூத்து நிலையிலேயே நின்றுவிட, புதுக் கவிதையில் வரும் இவ்வகையான உத்தி கவிதையின் பொருளுக்குத்
துணை செய்கின்றது. எனவே இதுவும் புதிதல்ல, மரபானதே

     புதுப்புது உருவங்களைத் தோற்றுவித்தல் புதிதல்ல. இதுவரை வெளிவந்த சந்தப் பாடல்கள் எத்தனையோ புதிய உருவங்களைத் தந்துள்ளன. எனவே புதிய உருவத்தில்
எழுதுவதும் மரபானதே.ஒரே படைப்பில். பலவகை உருவங்களைப் புகுத்துவதும் புதிதல்ல.
இணைக்குறள் ஆசிரியப்பா, வஞ்சி விருத்தம், வெண்டுறை, கட்டளைக் கலித்துறை என்னும் பல உருவங்களால் இயல்வது கலம்பகம். எனவே இதுவும் மரபானதே.

     இக் கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும் பொழுது புதுக்கவிதை மரபானதே
என்பதை ஒப்புக் கொள்ள விரும்புவோரும் அது யாப்புக்கு உட்பட்டது என்பதை
மறுக்கலாம். அதனால் இக்கருத்துக்கு விளக்கம் தேவைப்படுகிறது என்று கூறி செல்வம், அநேகம் புதுக்கவிதைகளை வகைப் படுத்தி உதாரணம் காட்டியுள்ளார்.

     ‘புதுக் கவிஞர்களுக்கு யாப்பே தெரியாது என்று கவிஞர்களும் ‘கவிஞர்களுக்கு
யாப்புதான் தெரியும்’ என்று புதுக் கவிஞர்களும் செய்கின்ற “கேலியின் அடிப்படை மேற்போக்கான பார்வைதான். தமிழ் மரபையும் யாப்பையும் இணைத்து நோக்கும் போது, கவிஞர்களின் பிடிவாத இயல்பும் புதுக் கவிஞர்களின் புரட்சி நோக்கமும் பொருள் பொதிந்தனவாகத் தோன்றுவதில்லை. ஏனென்றால் தமிழ் மரபையும் யாப்பையும் இணைத்து நோக்கும்போது, பிடிவாதத்திற்கும் புரட்சிக்கும் தேவை இருப்பதாகவே தெரியவில்லை. இவ்விரண்டுக்கும் இடையில் சிக்கிக் கொள்வது தமிழ்க் கவிதை தான். பிடிவாதம் வறட்சியைத் தருகிறது. புரட்சி கட்டுக் கோப்பைத் தளர்த்துகிறது. இரண்டும் கவிதைக்கு இழப்பையே
விளைவிக்கின்றன”.

     இவ்வாறு கூறி, செல்வம் கவிதையின் உருவம், உள்ளடக்கம் சம்பந்தமான
விளக்கங்களை எழுதியிருக்கிறார்.

     “கவிஞரின் படைப்புக்களில் பெரும்பாலானவை செய்யுள் அல்லது பாடலைச்
சார்ந்தவை. புதுக் கவிஞர்களின் படைப்புகளில் பல கவிதையைச் சார்ந்தவை.

      ஒரு மொழியோ ஒரு காலமோ இலக்கியச் சிறப்பு மிக்கதாக ஆக வேண்டும்
என்றால் அந்த மொழியிலோ காலத்திலோ நிறைய செய்யுள் தோன்றிப் பயனில்லை.
நிறையப் பாடல் தோன்றியும் பயனில்லை. நிறைய கவிதை தோன்ற வேண்டும். ஏனென்றால்
பாவகை மூன்றிலும் தலைசிறந்தது கவிதைதான்.

      இன்று வறண்ட செய்யுளும், சற்றே ‘பசுமையான பாடலும், கட்டுக்குலைந்த
கவிதையுமே மிகுதியாக வெளிவருகின்றன. பாக்களே கவிதையாகத் தப்பிப் பிழைக்கின்றன.
இன்றைய இலக்கியச் சிறப்புக்கு இக் கவிதைகள் போதாது என்றே சொல்லவேண்டும்.