பக்கம் எண் :

169  வல்லிக்கண்ணன்

குருக்ஷேத்ரம்


     ‘எழுத்து’ம் ‘நடை’யும் புதுக்கவிதை வளர்ச்சிக்குப் பணி புரிந்து கொண்டிருந்த
காலத்திலேயே, தமிழ் இலக்கியத்தின் போக்கை ஓரளவுக்குப் பிரதிபலிக்கும் முயற்சியாக
‘குருக்ஷேத்ரம்’ திருவனந்தபுரத்தில் தோன்றியது.

     ‘குருக்ஷேத்ரம் தமிழ் இலக்கிய உலகில் ஒரு புதிய முயற்சி. இது ஒரு
சூழ்நிலையையும் அதன் விளைவையும் குறிக்கிறது. திருவனந்த புரத்தைச் சார்ந்த,
இலக்கியத்தில் ஈடுபாடு உடைய ஒரு சிலர் மூலதனங்கொண்டு உருவாகியது’.
(குருக்ஷேத்ரம்-அறிமுகம்).
 
     இந்த இலக்கியத் தொகுப்பை தயாரித்தவர் ‘நகுலன்’- டி.கே. துரைஸ்வாமி.
இத்தொகுதியில் கட்டுரை சிறுகதை கவிதை, குறுநாவல், நாடகம் எல்லாம் உள்ளன.
மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப் பட்ட கட்டுரை,கதை, கவிதைகள் சிலவும் இதில்
இடம் பெற்றுள்ளன.

     ‘குருக்ஷேத்ரம்’ பாராட்டத் தகுந்த நல்ல தயாரிப்பு, படைப்பாளிகளின் ஒத்துழைப்பு
நகுலனுக்குப் போதுமான அளவில் கிடைக்கவில்லை. எழுத்தாளர்கள் தாராள ஒத்துழைப்பு
அளித்திருந்தால். குருக்ஷேத்ரம் இன்னும் சிறந்த இலக்கியத் தொகுப்பாக விளங்கியிருக்க
முடியும். நகுலன் அணுகிய படைப்பாளிகளில் அநேகர் தங்கள் எழுத்துக்களை
குருக்ஷேத்ரத்துக்கு உதவ முன்வராத காரணத்தால், சிலரது பல கதைகள், கட்டுரைகள்,
கவிதைகளை இந்த ஒரே தொகுப்பில் இணைத்தாக வேண்டிய கட்டாயம் நகுலனுக்கு
ஏற்பட்டுவிட்டது.

     பிரமில் பானுசந்திரன் (தருமு சிவராமு) கட்டுரைகள் 3, மௌனி கதைகள்
2, சார்வாகன் கதைகள் 2, தக்ஷிணாமூர்த்தியின் கட்டுரை, கதை, மொழிபெயர்ப்புகள், நீல
பத்மநாபன் படைப்புகள், மொழிபெயர்ப்புகள், பல காணப்படுகின்றன.

     இப்படைப்பாளர்களின் ஆற்றலையோ படைப்புக்களின் தரத்தையோ நான் குறைத்து
மதிப்பிடவில்லை. ஆனால், ‘ஒரு குறிப்பிட்ட காலத்தின் ஆதிக்கத்தைக் காட்டி இலக்கியம்
காலாதீதமாக விளங்குவது’ என்பதை எடுத்துக் காட்டுவதற்கு, ஒரு சிலரது
எழுத்துக்களையே மிகுதியாகத் தொகுப்பதை விட, படைப்பாளிகள் பலரது
ஆக்கங்களைத் தொகுத்துத் தருவது உபயோகமாக இருக்கும். மேலும் தொகுதியில்
பல்வேறு ரகமான எழுத்துக்களும் (வெவ்வேறு நோக்கும் போக்கும் கொண்ட
எழுத்தாளர்களது படைப்புகளும்) சேர்ந்து அம்முயற்சியின் வெற்றியைச் சிறப்புறச் செய்யும்.

     குருக்ஷேத்ரம் கவிதைப் பகுதியில் இக்குறைபாடு பளிச்செனத் தென்படுகிறது.

     கவிதைகள் ஸி.ஜேசுதாசன் 3 (ஆங்கிலத்திலிருந்து), ஐயப்ப பணிக்கர் (நீல
பத்மநாபன் தமிழாக்கம்) 2, நீல பத்மநாபன், 5, ஹரி