பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 176

  ‘புல்’லென்று
படரும் இம்மாலைவாய்
அம்பல் கூம்ப
அலரும் சிதற
ஊரும் இவள் உருவம்
கண்டெனம் அல்லமோ!’
பாண,
ஆகலின்,
‘வறிது ஆகின்று, என் மடம் கெழு நெஞ்சே!’
                                            (மருதம் 47)
 
     ‘கவிதையை நான் எழுதிவிட்டேன். இந்த மாதிரி முயற்சிகள் அவசியமா என்பது
வாசகர்கள் தங்ளுக்குள் நிச்சயித்துக் கொள்ள வேண்டியது’ என்றும் நகுலன்
குறிப்பிட்டிருக்கிறார்.

     ‘சோதனை முயற்சி’ என்ற தன்மையில் விளையாட்டாகவோ, பொழுதுபோக்காகவோ,
தனது அகண்ட படிப்பறிவையும் ஆழ்ந்த ரசனையையும் புலப்படுத்த ஆசைப்படுகிறவர்கள்
இது போன்ற வேலையில் ஒன்றிரு தடவை ஈடுபடலாம், பொதுவாகப் பார்த்தால், இது வீண்
வேலை என்றே நான் கருதுகிறேன்.

     குருக்ஷேத்திரம் என்ற இலக்கியத் தொகுப்பு 1968ல் வெளி வந்தது. அதற்குப் பிறகு
எந்தத் தொகுப்பும் வரவில்லை. இது போன்ற தொகுப்பு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
கிரசுரிக்கப்பட்டால் இலக்கியத்துக்கும் படைப்பாளிகளுக்கும் நல்லது. இலக்கிய
ரசிகர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும். அது சாத்தியப்படா விட்டால் தரமான
இலக்கியத் தொகுப்பு வருஷத்துக்கு ஒன்றாவது தயாரித்து வெளியிடப்பட வேண்டும்.
இலக்கியத்தின் வளர்ச்சியை அளவிடவும் நல்ல படைப்புகளும் புதிய சோதனைகளும்
தோன்றவும் அது துணைபுரியும்.

     ஆனால் தமிழ்நாட்டில் இது நிகழ்வதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை.
எத்தனையோ வகைகளில் துரதிர்ஷ்டம் பிடித்தது தமிழ் மொழி, இதையும் தமிழின்
‘துரதிர்ஷ்டத்’தில் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.