‘எழுத்து’வின் கவிதைப்பணி | 1959 ஜனவரியில் மாதப் பத்திரிகையாகப் பிறந்தது ‘எழுத்து’ ஒன்பது ஆண்டுகள் மாசிகையாகவே வளர்ந்த அது, பத்தாவது ஆண்டில் ஏப்ரல் முதல் காலாண்டு ஏடு ஆக மாறியது. 1968 மார்ச் முடிய 111 ஏடுகள் மாத இதழ்களாகவும், பின்னர் மும்மாதம் ஒரு முறை ஏடு ஆக 8 இதழ்களும் எழுத்து வெளிவந்தது. 1970 ஜனவரி-மார்ச் இதழாகப் பிரசுரமான 119 வது ஏடுதான் ‘எழுத்து’வின் கடைசி இதழ் ஆகும். இந்தப் பதினோரு ஆண்டுகளிலும் எழுத்து 460 க்கும் மேற்பட்ட கவிதைகளை பிரசுரித்துள்ளது. இவற்றில் மொழிபெயர்ப்புக் கவிதைகளும் அடங்கும். ‘எழுத்து’வில் வெளி வந்த கவிதைகளை இதுவரை இக்கட்டுரைத் தொடரில் நான் விரிவாகவே அறிமுகம் செய்திருக்கிறேன். எழுத்து ஆசிரியர் சி.சு. செல்லப்பா தமது பத்திரிகையின் மூலம் புதுக்கவிதை வளர்ச்சிக்கு சிறப்பான சேவை புரிந்ததுடன், ‘எழுத்து பிரசுரங்’களாகக் கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டும் போற்றத் தகுந்த பணி ஆற்றியிருக்கிறார். ந. பிச்சமூர்த்தி கவிதைகளைத் தொகுத்து 1962 ஆகஸ்டில் ‘காட்டு வாத்து’, என்ற புத்தகமாக அவர் பிரசுரம் செய்தார். பிச்சமூர்த்தி 1938-1944 காலகட்டத்தில் எழுதிய கவிதைகள் இருபதும், 1959க்குப் பிறகு எழுதியவை பதினைந்தும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பிறகு, 24 கவிகளின் 63 கவிதைகளை சேர்த்து ‘புதுக்குரல்கள்’ என்ற தொகுப்பாக 1962 அக்டோபரில் செல்லப்பா பிரசுரித்தார். பிச்சமூர்த்தி 1962க்கு முன்பு எழுதிய ஐந்து கவிதைகளையும் சேர்த்து ‘வழித்துணை’ என்ற புத்தகமாக 1964 ஏப்ரலில் அவர் வெளியிட்டார். தி.சோ. வேணுகோபாலன் எழுத்து இதழ்களில் எழுதிய கவிதைகள் தொகுக்கப் பெற்று ‘கோடை வயல்’ என்ற புத்தகமாக 1965 ஆகஸ்டில் வெளிவந்தது. ‘கண்ணுக்குள் திரை இருப்பதைக்கூட உணராத சமூகத்தைப் பார்த்த ஏமாற்றம், ஏக்கம், கோபம் மூன்றும் கலந்த உணர்ச்சி’ வேணுகோபாலன் கவிதைகளில் ஒலி செய்கிறது. ‘இலக்கிய ஞான சூன்யம்’ மேலோங்கி நிற்கிற நிலைமையும் சுதந்திரம் பெற்றும் நாட்டில் நிலவுகிற தத்துவ தரிசனக் குழப்ப நிலையும், நிகழ்கால சமுதாயம் வலிமையற்றிருப்பதை மறக்க, மரபென்றும் பண்பென்றும், பண்டையகால வாழ்வு என்றும் மதுவின் போதை வசப்பட்டு ஏற்படும் தடுமாற்றம், அதனால் விளையும் தவறான மதிப்பீடு, ஆகியவைகளும் அவர் உள்ளத்தில் ஏற்படுத்தும் சலனங்கள் தாக்குதல்களாகவும் பரிகாசக் கணைகளாகவும் அவர் கவிதைகளில் வெளியிடப்பட்டுள்ளன. வேணுகோபாலனைப் போலவே தனித்த நம்பிக்கைகளும் நோக்கும்மனப்போக்கும் கொண்டவர்கள், பல கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் தேர்ந்தெடுத்து கவிதையாக இசைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட முன் வந்தபோது, ‘எழுத்து’ அவர்களுக்கு நல்ல அரங்கமாக உதவியது. | | |
|
|