பக்கம் எண் :

187  வல்லிக்கண்ணன்

பரமனின் நிலை என்ன என்பது பற்றி எல்லாம் கவிதை விரிவாகப் பேசுகிறது. நயமான
பகுதிகள் பல காணக்கிடக்கின்றன. கலைஞனான தச்சன் எடுத்துச் சொல்லும் சிந்தனை
‘ஊன்றி உணர்தற்கு உரிய உண்மை’ஆகும்.
 
  ‘செய்வதைத் திருந்தச்
செய்வதே வேலை
யோகம்,
ரவி கூறும் மர்மம்
புவி கூறும் கர்மம்,
வயிற்றுக்காய் வேலை என்றால்
நெஞ்சில் ஒரு பிசாசுத்தலை
நில்லாமல் ஆடும்.
ஒதுக்க முடியாத
உள்ளத்து உந்தலானால்
கட்டாந் தரைகள்
கனக மாளிகையாகும்.
கையே தடவுளாய்
சோலைகளாய் ஆலைகளாய்
வாழ்வின் திருவாக்கை
வெளி எங்கும் எழுதிவிடும்,
வேலையிலே வான்தோன்றும்.
காலத்தின் வாலாடாது
கூலிக் கணக்கும்
காலக் கணக்கும்
படித்தவர் சொன்னாலும்
பழுத்தவர்க்கில்லை’
 
     பிச்சமூர்த்தியின் கவிதைப் படைப்புகள் அனைத்தையும் (இரண்டு கால
கட்டங்களிலும் ஆக்கப் பெற்றவை முழுவதையும்) படித்து ரசிக்கிறவர்கள் அவர் ஒரு நல்ல
கவிஞர் என்பதையும், கவிதைத் துறையில் அவருடைய சாதனை பெரிது என்பதையும்
உணர முடியும்.