| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 188 |
தாமரை | தமிழ்நாட்டின் ‘முற்போக்கு இலக்கியப் பத்திரிகை’ யான ‘தாமரை’ புதுக் கவிதைத் துறையில் ‘இரண்டாவது அணி’ தோன்றி வளரத் துணை புரிந்தது. ‘தாமரை’ கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய மாசிகை. பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் ப. ஜீவானந்தம் அவர்களின் ஆசிரியப் பொறுப்பில் பல வருடங்கள் வளர்ந்தது. அப்போதும், அவரது மரணத்துக்குப் பிறகு மாஜினி ஆசிரியராகப் பதவி வகித்த காலத்திலும், ‘தாமரை’ புதுக் கவிதையில் கவனம் செலுத்தவில்லை. மரபுக் கவிதைகளை மட்டுமே பிரசுரித்து வந்தது. பின்னர், ‘ஆசிரியர் குழு’ ஒன்று பத்திரிகைப் பொறுப்பை மேற்கொண்டது. அந்நிலையிலும் சில வருட காலம் ‘தாமரை’ புதுக் கவிதையில் அக்கறை கொள்ளாமலே இருந்தது. பொதுவான இலக்கிய நோக்குக்கு எதிரானது ‘முற்போக்கு இலக்கிய’ நோக்கு; தனி மனித உணர்வுகளை, மனப் பதிவுகளை, தனி நபர் நோக்கை சித்திரித்துக் கொண்டிருப்பது உண்மையான இலக்கியம் இல்லை; மார்க்ஸீய அடிப்படையில், சமுதாயப் பார்வையோடு, சுரண்டும் வர்க்கத்துக்கு எதிராகவும், உழைக்கும் இனத்துக்கு நம்பிக்கை ஊட்டும் தன்மையிலும் எழுதப்படுபவைதான் இலக்கியம் ஆகும் என்பது ‘தாமரை’யின், கம்யூனிச அனுதாபிகள் ஆதரவாளர்களின் கொள்கை ஆகும். ஆகவே, பொதுவான இலக்கியவாதிகளின் நோக்கையும் போக்கையும் குறை கூறுவதும் கண்டிப்பதும், அவர்களது படைப்புகளை ‘மார்க்ஸீயப் பார்வையில்’ திறனாய்வு செய்வதும் ‘தாமரை’யின் முக்கியக் கடமைகளில் ஒன்று. ‘தாமரை’யின் ஆசிரியர்குழுவில் முக்கியமான பங்குகொண்டிருந்த தி.க. சிவசங்கரன் புதுக்கவிதையிலும் ஈடுபாடு உள்ளவர். புதுக் கவிதைப் படைப்புகளை அவர் ரசித்தாலும், அதன் வேக வளர்ச்சியை அவர் வரவேற்ற போதிலும், புதுக்கவிதையின் உள்ளடக்கம் அவரது பூரண ஆதரவையும் பெறக் கூடியதாக அமைந்திருக்கவில்லை. பெரும்பாலும் வெறுமை, மனமுறிவு, விரக்தி, நம்பிக்கை ஊட்டாத தன்மை போன்ற குரல்களே புதுக் கவிதைகளில் ஒலிக்கின்றன என்று அவர் உணர்ந்து அவ்வப்போது தன் கருத்தை வெளியிட்டும் வந்தார். அனைத்தையும் ‘மார்க்ஸீயப் பார்வையில்’ கண்டு தனது முடிவுகளை அறிவிக்கும் ஆற்றல் பெற்ற பேராசிரியர் நா. வானமாமலை ‘எழுத்து பிரசுரம்’ ஆன ‘புதுக் குரல்கள்’ உள்ளடக்கத்தை ஆராய்ந்து விரிவான கட்டுரை ஒன்று எழுதினார். ‘புதுக் கவிதையின் உள்ளடக்கம்’ என்ற அந்தக் கட்டுரை 1968 டிசம்பர் ‘தாமரை’யில் வெளியாயிற்று. | | |
|
|