அக் கட்டுரையின் அடிப்படைக் கருத்துக்கள் இரண்டு. ‘முதலாவதாக, புதுக் கவிதைகள் அடிநாதமாக ஃப்ராய் டிஸத்தையும் அதன் அம்சங்களைக் கொண்ட ஸர்ரியலியஸம், எக்ஸிஸ் டென்ஷியலிஸம் போன்றவற்றையும் கொண்டிருக்கின்றன. அதனால் இக் கவிதைகள் அகவய நோக்கு கொண்டிருக்கின்றன. இதனால் இக் கவிஞர்கள் தம்மைத் தாமே சமுதாயத்திலிருந்து பிரித்துக் கொண்டு சமுதாயத்தை ஒரு பார்வையாளன் போலக் கவனிக்கிறார்கள். இரண்டாவது, உற்பத்தி, உறவுகளினால் ஏற்பட்டுள்ள முரண்பாட்டினால் உலகமே முக்கியமான இருவேறு வர்க்கங்களாகப் பிரிந்து நிற்கின்றது, ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை ஒடுக்கி வைத்திருக்க, அதை எதிர்த்து ஒடுக்கப் பட்ட வர்க்கம் நடத்தும் போராட்டத்தில் ஒடுக்கப்பட்டோர் பக்கமாக இப்புதுக் கவிஞர்கள் நிற்கவில்லை. மாறாக, உலகமே துன்பமயமானது என்ற நம்பிக்கை வறட்சியும் மன மொடிந்த போக்கும் கொண்டிருக்கிறார்கள்.’ இக் கருத்துக்களுக்கு ஆதாரம் கூறும் விதத்தில் ‘புதுக்குரல்கள்’ தொகுப்பிலிருந்து நா. வானமாமலை அநேக உதாரணங்களை எடுத்துக் காட்டியிருந்தார். ‘எழுத்து’வில் புதுக்கவிதை சம்பந்தமாகக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த சி.கனகசபாபதி புதுக்குரல்களை தனது நோக்கில் ஆய்வு செய்து, புதுக் கவிதையில் சமுதாய உள்ளடக்கம்; என்றொரு விரிவான கட்டுரையை, நா. வா. கட்டுரைக்கு பதில் மாதிரி எழுதினார். அது ‘தாமரை’ 1969 மார்ச் இதழில் பிரசுரமாயிற்று. சி. கனகசபாபதிக்கு பதில் கூறும் முறையிலும், நா. வா கட்டுரைக்கு மேலும் விளக்கம் ஆகவும் வெ. கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘புதுக்கவிதையின் உள்ளடக்கமும் சமுதாய உணர்வும்’, என்ற நீண்ட கட்டுரை 1969 மே மாத ‘தாமரை’யில் இடம் பெற்றது. புதுக்கவிதை எழுதுகிறவர்களுக்கு ‘சமுதாயப் பார்வை’ கிடையாது என்று அவர் ‘அறுதியிட்டு உறுதிகூறி’யிருந்தார். சமுதாயப் பார்வை என்பது என்ன என்றும் அவர் தெளிவு படுத்தியுள்ளார். இவர்கள் ‘நான்’ என்று குறிப்பிடுகிறார்களே அந்த ‘நான்’ என்ற உணர்வு மனித குல வரலாற்றில் இல்லாமலிருந்த நிலைமையும் ஒன்று உண்டு. இந்த நானுக்கும் சமுதாயத்திலுள்ள உற்பத்தி உறவுகளுக்கும் சம்பந்தமுண்டு. மனிதர்கள் இனக் குழுக்களாக (Tribal Societies) வாழ்ந்த போது இந்த நான் எனது என்ற சிந்தனை இருந்திருக்க முடியுமா? அப்பொழுது சமுதாயம் முழுவதும் நான் என்பதற்கு பதில் ‘நாம்’ என்ற சொல்லில் அடங்கியிருந்தது. ஏனெனில் சேகரிக்கப்படும் பொருள் சேகரிப்பவனுக்கு சொந்தம் அல்ல. அது ‘நமக்குச் சொந்தம்’ என்ற நிலை இருந்தது. அச்சமூகத்திலுள்ள தனிமனிதன் ‘நான்’ ‘எனது’ என்ற நினைவு அற்று இருந்தான். சமுதாய நிலையில் மாற்றம் ஏற்பட்டுத் தனியார் சொத்துடைமை முறை வந்த பிறகே இந்த ‘நான்’ தோன்றியது. கட்டம் கட்டமாக இதன் தன்மை மாறிக் கொண்டே வருகிறது. முதலாளித்துவ சமூகத்தில் இருக்கும் ‘நான்’ வேறு, இதற்கு முன்னர் | | |
|
|