| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 190 |
நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருந்த - ‘நானின்’ தன்மை வேறு, எனவே இந்த ‘நான்’ சமுதாய மாற்றத்திற்குத் தகுந்தாற்போல மாற்றம் அடைகிறது. அதே போல இந்த ‘நான்’ சோஷலிச சமூகத்தையும் படிப்படியாகப் பொதுவுடைமைச் சமுதாயத்தையும் அடையும் பொழுது சமுதாயத்தோடு முரணின்றி ஒன்றி நிற்கும் தன்மையை அடைகிறது. இந்த நிலைக்கு இட்டுச் செல்லும் போராட்டத்தைப் புரிந்து கொண்டு அதற்குத் துணை நிற்பது கவிஞனின் தலையாய கடமை. இதை உணர்வதையே உண்மையான சமுதாயப் பார்வை என்று நாம் சொல்கிறோம். மார்க்ஸ் பின்வருமாறு சொல்கிறார்; ‘ மனிதர்கள், உற்பத்தியையும் உற்பத்தி உறவுகளையும் அபிவிருந்தி செய்கின்ற அதே சமயம், அவற்றிற்குத் தகுந்தவாறு தங்ளையும், தங்களது சிந்தனைகளையும் தங்களது சிந்தனைகளின் விளைவுகளையும் மாற்றிக் கொள்கிறார்கள். வாழ்க்கை என்பது மனத்தினால் நிர்ணயிக்கப்படுவதல்ல; மாறாக உணர்வுதான் வாழ்க்கையால் நிர்ணயம் செய்யப்படுகிறது.’ இவ்வாறு அந்தக் கட்டுரை அறிவுறுத்துகிறது. புதுக் கவிதை குறித்து மார்க்ஸீய சிந்தனைக் காரர்கள் அவ்வப்போது ரசமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். “புதுக்கவிதை என்பது முதலாளித்துவ சமூகத்தின் சமூக உறவுகளின் மீது மனிதனுக்கு இருக்கும் தொடர்பு அறத் தொடங்கும்போது தோன்றுகிற இலக்கிய வடிவமாகும்” என்கிறார் கிறிஸ்டோபர் காட்வெல். முதலாளித்துவ ‘சமூகத்தின் உற்பத்திச் சாதனங்களின் அதிவேகமான மாறுதலில் பழஞ் சமூக உறவுகள் மாறுவது போலவே, பழஞ் சமூகத்தின் சிந்தனைகள், கொள்கைகள், இலக்கிய வடிவங்கள் இலக்கிய உத்திகள் போன்றனவும் மாறுபடும் என்பது பொருள்முதல்வாத வரலாற்றியல் கருத்தாகும். இம்முறையில் நாவலும் பூர்ஷ்வா இலக்கிய வடிவமாக விளக்கப்படும். இவ்வாறு இலக்கிய வடிவம், உத்திமுறை போன்றன மாறிய போது 20ம் நூற்றாண்டின் மேல்நாட்டுச் சமூக, ஆன்மீகச் சிந்தனை நெருக்கடியால் தோன்றிய குழப்பமான நிலை, வக்ர உணர்வு, மனித வெறுப்பு போன்ற பண்புகள் இலக்கியத்தில் இடம் பிடித்துக் கொண்டன. மேல்நாட்டு இறக்குமதிப் பொருளாய் தமிழில் வந்த புதுக்கவிதையும் மேல் நாட்டு நோய்க்கூறான மனித வெறுப்பு போன்றவற்றை நகல் செய்து தமிழ்க் கவிதை உள்ளடக்கமாக மாற்றியுள்ளது.” இவ்வாறு தமிழவன் ‘தாமரை’ கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். ‘தாமரை’ அவ்வப்போது இவ்விதமான கட்டுரைகளைப் பிரசுரித்ததோடு, முற்போக்குக் கருத்துகளை உள்ளடக்கமாகக் கொண்ட புதுக்கவிதைகளை வெளியிடவும் முன்வந்தது. பிறநாட்டு முற்போக்குக் கவிஞர்களின் படைப்புக்களைத் தமிழாக்கியும் பிரசுரித்தது. இப்படியாக, கால ஓட்டத்தில், ‘தாமரை’ புதுக் கவிதைக்கு அதிகமான இடம் ஒதுக்கி முற்போக்குக் கவிஞர்கள் வளரத் துணை புரிந்தது. இலங்கை முற்போக்கு இலக்கியவாதிகளில் ஒருவரும், கலை இலக்கியத் திறனாய்வாளரும் ஆன கார்த்திகேசு சிவத்தம்பி இது சம்பந்தமாக | | |
|
|