கொண்ட முற்போக்கு எழுத்தாளர்’, ஏனைய இலக்கிய வடிவங்களைத் தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வது போலவே, வளர்ச்சி பெற்று வருகிற புதுக் கவிதையையும் ஒரு ஆயுதமாகக் கையாள வேண்டும் எனும் நோக்கத்துடன்தான் ஆசிரியர் குழுவினர் ‘தாமரை’யின் பக்கங்களை புதுக்கவிதைக்குத் தாராளமாக ஒதுக்கினார்கள். லட்சிய வேகமும், கொள்கைப் பற்றும், சமூகத்தை மார்க்ஸீயப் பார்வையோடு, சீரமைக்கும் கடமை உணர்வும் கொண்ட இளைஞர்கள் பலர் உற்சாகமாக புதுக் கவிதை படைக்கலானார்கள். நவபாரதி, புவியரசு, பரிணாமன், மு. பாவாணன், விடிவெள்ளி, கை. திருநாவுக்கரசு, பிரபஞ்சகவி, கோ. ராஜாராம், மு. செந்தமிழன் என்று பலர் உணர்ச்சித்துடிப் போடு ‘தாமரை’யில் கவிதைகள் படைத்திருக்கிறார்கள். நா. காமராசன், சிற்பி, அக்கினிபுத்திரன், தமிழ்நாடன், மீரா, சக்திக்கனல் போன்றவர்களின் கவிதைகளும் ‘தாமரை’யில் வந்துள்ளன. அக்கினிபுத்திரனும் தமிழ்நாடனும், சொந்தப் படைப்புக்களை விட, மொழி பெயர்ப்புக் கவிதைகளையே அதிகமாக எழுதியிருக்கிறார்கள். சார்வாகன், வண்ணதாசன், வண்ணநிலவன் போன்றவர்களின் கவிதைகளும் அபூர்வமாக இடம் பெற்றுள்ளன. ‘புதுக்குரல்கள்’ கவிஞர்களின் உள்ளடக்கம் குறிப்பிட்ட ஒரு சில எண்ணிக்கையினுள் அடங்கிவிடுவதாக. நா. வானமாமலை தமது விமரிசனத்தில் குறைகூறியிருக்கிறார். ‘மார்க்ஸீயக் கண்ணோட்டத்துடனும் சமூகப் பார்வையோடும்’ கவிதை எழுத முன் வந்தவர்கள் கூட அனைத்து விஷயங்களையும் தங்கள் எழுத்துக்களால் தொட்டு விடவில்லை. குறிப்பிட்ட சில விஷயங்களிலேயே திரும்பத் திரும்ப வளையமிடுவதை ‘தாமரை’க் கவிதைகள் நிரூபிக்கின்றன. அமெரிக்க வெறுப்பு, சோவியத் ரஷ்யாவுக்குப் புகழாரம், வியத்நாமுக்கு வாழ்த்து, புரட்சிக்கு வரவேற்பு, ஏழை படும்பாடு, பணக்காரன் திமிர், நீக்ரோ பிரச்னை, முதலாளி (பண்ணையார்) காமவெறி, ஒடுக்கப்பட்டோருக்கு அனுதாபமும் ஆதரவும் போன்ற சில விஷயங்களையே இவர்கள் கவிதைப் பொருளாகக் கொண்டுள்ளனர். பங்களாதேஷ் பற்றியும் அநேகர் எழுதியிருக்கிறார்கள். மகாத்மாவை குறைகூறிக் கவிதை எழுதுவதிலும் சிலர் ஆர்வம் காட்டியுள்ளனர். இங்கு ஒரு புரட்சி வந்தால் எல்லா நிலைமைகளும் சீர் திருந்தி விடும்; அப்படி ஒரு புரட்சி நிச்சயம் வரும் என்ற நம்பிக்கை முற்போக்குக் கவிஞர்கள் அனைவருக்கும் இருக்கிறது. அதனால் செவ்வசந்தம், சிவப்பு மலர் பூக்கும் போன்ற வார்த்தைகளில் மோகம் கொண்டு இவர்களில் அநேகர் அவற்றை அளவுக்கு அதிகமாக அள்ளித் தெளித்திருக்கிறார்கள், தங்கள் கவிதைகளில். கருத்துக்களைவிட வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதனால், இவர்கள் நீளம் நீளமான கவிதைகளைப் படைக்கும் உற்சாகிகளாக விளங்குகிறார்கள். சிறு கதைகளுக்கு நீளமான தலைப்பு கொடுப்பது ஒரு ஃபாஷன் என்ற நிலை ஏற்பட்டது போல, கவிதைகளுக்கு நீளநீளத் தலைப்புகள் சூட்டுவதும் இவர்களிடையே ஒரு நியதி போல் காணப்படுகிறது. | | |
|
|