பக்கம் எண் :

197  வல்லிக்கண்ணன்

     போல - (மழை காலத்துக் காளான்கள் போல் என்றும் சொல்லலாம்) ‘மினி’ கவிதை
வெளியீடுகள் எங்கெங்கிருந்தெல்லாமோ பிரசுரம்பெற்றன.

     இவற்றில் எல்லாம் ‘மார்க்ஸீயப் பார்வை’ உடைய எழுத்தாளர்களும். பொதுவான
இலக்கிய நோக்குடையவர்களும் கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். முற்போக்கு இலக்கியப்
பணிக்கென்றே தோன்றிய தாமரை, கார்க்கி, செம்மலர், வானம்பாடி, உதயம் முதலிய
பத்திரிகைகளிலும் கவிதை எழுதியவர்களில் சிலர் இதர இலக்கிய வெளியீடுகளிலும்
எழுதியிருக்கிறார்கள்.

     கணையாழி, கசடதபற, தீபம், ஞானரதம், அஃ போன்ற இலக்கிய வெளியீடுகளில்
கவிதை எழுதியிருப்பவர்களில் சிலர் பிற வெளியீடுகளிலும் எழுதியிருக்கிறார்கள்.
வண்ணங்கள், சதங்கை போன்ற இலக்கியப் பத்திரிகைகள் இரண்டு பிரிவுக் கவிஞர்களின்
படைப்புக்களையும் பிரசுரித்துள்ளன.

     குறிப்பிட்ட சிலர் அல்லது பலரது பெயர்களும் படைப்புக்களும் தான் பொதுவாக
அநேக பத்திரிகைகளிலும், வெளியீடுகளிலும் காணப்படுகின்றன.

     ஆகவே, இனி வரும் ஆய்வை இதுவரை செய்தது போல், தனித்தனிப்
பத்திரிகையாக எடுத்துக் கொண்டு கவனிப்பது சரிப்பட்டு வராது என்று நான்
நினைக்கிறேன். பத்திரிகையாக எடுத்துக் கொண்டு, அவ்வவற்றில் புதுக்கவிதைகளைக்
குறிப்பிட்டு எழுதுவதை விட, எழுபதுகளில் வந்த இலக்கியப் பத்திரிகைகளில் எழுதியுள்ள
படைப்பாளிகளின் புதுக்கவிதைகள், அவற்றின் போக்குகள் தன்மைகள் பற்றி எழுதுவதே
பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

     என்றாலும், இரண்டு பற்றித் தனித்தனியே எழுதியாக வேண்டியது அவசியம் என்று
எனக்குப் படுகிறது. அவை தமக்கெனத் தனித்தன்மை கொண்டிருப்பதோடு, புதுக் கவிதை
எழுதுபவர்களையும் புதுக்கவிதையின் போக்கையும் வெகுவாகப் பாதித்துள்ளன என்று நான்
உணர்கிறேன். ‘கசடதபற’ என்ற இலக்கியப் பத்திரிகையும், ‘வானம்பாடி’ என்ற கவிதை
வெளியீடும்தான் அவை.