| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 198 |
கசடதபற | 1970 அக்டோபரில் பிறந்தது ‘கசடதபற’. “இன்றைய படைப்புக்களிலும், அவற்றைத் தாங்கி வருகிற பத்திரிகைகளிலும் தீவிர அதிருப்தியும் அதனால் கோபமும் உடைய பல இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், திறனாய்வாளர்களின் பொதுமேடைதான் கசடதபற. ஊதிப்போன சுயகௌரவங்களாலும், பிதுங்கிய பார்வைகளாலும் இவர்கள் பாதிக்கப்படாதவர்கள்.அரசியல், சமயம், மரபு இவை சம்பந்தப்பட்ட ஒழுக்கங்களுக்கு வாரம் தவறாமல் தோப்புக்கரணம் போடுபவர்கள் யாரும் இவர்களில் இல்லை. இலக்கியத்தை அதுவாகவே பார்க்கத் தனித் தனியே தங்களுக்குப் பயிற்சி நிரம்பப்பெற்று பிறகு சேர்ந்து கொண்டவர்கள் இவர்கள். உலகின் இதர பகுதிகளின் இலக்கியத்தில் நிகழ்வனவற்றைக் கூர்ந்து கவனிப்பதிலும், தமிழ்ச் சிந்தனையில் புதிய கிளர்ச்சிகளை இனம் கண்டு கொள்வதிலும் தேர்ந்தவர்கள். “கசடதபற’ சிந்திக்கிறவனுக்கு இன்றைய உலகம் விடும் அறைகூவல்களை ஏற்றுக்கொள்ள வந்திருக்கிறது. சமூகத்தின் கூட்டுப் பொறுப்பான கலாச்சாரத்தின் ஆழ அகலங்களை இலக்கியத்தில் காட்ட கசட தபற வந்திருக்கிறது... “எதையும் செய்யுங்கள், ஆனால் இலக்கியமாகச் செய்யுங்கள் என்று மட்டுமே கசடதபற சொல்லும்”. கசடதபற முதல் ஏட்டில் பிரசுரமான அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள் இவை. கசடதபற 1970 அக்டோபர் முதல் 1973 முடிய, மாசிகையாக வெளிவந்தது. 32 இதழ்கள் வந்துள்ளன. ஜூன் ஜூலை வெளியீடு ஆக ஒரு அறிவிப்பு பிரசுரித்து விட்டு, கசடதபற’ நின்று விட்டது. இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளில் அது செய்த சாதனைகள் சோதனைகள் - அது பெற்ற வெற்றிகள், தோல்விகள் - குறித்து ஆராய்வது என் நோக்கம் அல்ல,‘கசடதபற’வில் வெளிவந்த கவிதைகள் மட்டுமே இங்கு எனது கவனிப்புக்கு இலக்காகின்றன. கவிதைகளை ஆராய்வதற்கு முன்பு முக்கியமாக ஒரு கட்டுரையைக் குறிப்பிட்டாக வேண்டும். 6-வது ஏட்டில் வெளிவந்துள்ள சார்வாகன் கட்டுரை ‘புதுக்கவிதை’அருமையான எண்ணங்களை அழகாக எடுத்துச் சொல்கிறது. பெரிய அளவு (டிம்மி சைஸ்) கசடதபறவில் ஐந்து பக்கங்கள் வந்திருக்கிற அந்தக் கட்டுரை ஊன்றி உணர்வதற்குரிய சிந்தனைகளைத் தெளிவாகக் கூறுகிறது. அதை முழுமையாக மறு பிரசுரம் செய்வது சாத்தியமில்லை. எனினும் சில சிறப்பான. அழகான, கனமான சிந்தனைகளை எடுத்து எழுதாமல் மேலே செல்ல மனம் வரவில்லை. “கவிதை கனவு மாத்திரமல்ல; கனவுப் பார்வை மாத்திரமல்ல; கனவு காணும் மனசின் வாழ்வு. அவ்வாழ்வின் மொழிவழியொழுகும் வெளியீடு. | | |
|
|