மனித ஜாதியின் வாழ்க்கை தனக்குத் தானே வகுத்துக் கொண்டே கட்டு திட்டங்களை மீறி அணையுடைத்து வெள்ளம் போலப் பெருகி ஓடிக்கொண்டு வருகிறது. மேலும் பெருக்கெடுத்தோடப்பார்க்கிறது. மனிதன் தனக்குள்தான் ஏற்படுத்திவைத்துக் கொண்ட கட்டுப்பாடுகள், வழி வந்த மரபுகள் எல்லாம் ஒவ்வொன்றாகத் தகரத் தொடங்கியிருக்கின்றன. தன் சரித்திரத்திலேயே அனுபவித்தறியாத சுதந்திரத்தைப் பல்வேறு துறைகளில் தன் அறிவாலும் செயலாலும் அவன் இன்று அனுபவித்து வருகிறான். மேலும் அனுபவிக்கிறான். இதில் ஒரு அலை புதுக்கவிதை. கலை, கலைப்படைப்பு, அதில் ஒன்றான இலக்கியம், அதில் ஒன்றான கவிதை- இவை எல்லாம் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையவை. ஆதி காலத்தில் எப்படி எப்படியோ துவங்கி பின்னால் எப்படி எப்படியோ வளர்ந்து பிரிந்து சேர்ந்து இன்னும் மாறிக் கொண்டிருப்பவை. வரம்பொன்று கட்டி இது தான் இது என்று நம்புகிற, சொல்கிற காலம் போய்விட்டது. இன்றைக்கு வாழ்வும் அதன் ஒரு பகுதியான கலையும் மேலும் மேலும் சிக்கலாகி, கிளையும் விழுதும் வேரும் இலையும் பூவும் காயும் விட்டு சிறிய விதை ஆலமரமானாற்போல ஆகி வருகிறபோது, நான் ஓரளவு தான் வரையறைகளுக்கு மதிப்புக் கொடுக்க முடியும். இதில் ஒரு அலை புதுக் கவிதை. மனிதன் புறவுலகத்தையும் பிற மனிதர்களின் செயல்களையும் கனவுப் பார்வையாகக் கவித்தது போதாதென்று, தன் அகத்தூடும் அப்பார்வையைப் பிரயோகிக்கத் தொடங்கியிருக்கிறான். அறிவுலகத்தில் இதைச் செய்துகொண்டு வருவதைப் போல, கலையுலகத்திலும் செய்யப்பார்க்கிறான். இவ்வாறு செய்யும்போது, சில சமயம், பழைய முறைகள் தடையாக இருப்பதாகவோ அல்லது அவைகளால் இவனுக்குத் தேவையானபடி செய்ய இயலாமல் போவதாகவோ உணர்கிறான். புது வழிகளை வகுத்துக் கொள்ளப் பார்க்கிறான். இதில் ஒரு அலை புதுக்கவிதை. அழகையும் பெருக்கிக் கொண்டு அசிங்கத்தையும் பரப்பிக் கொண்டு அறிவையும் வளர்த்துக் கொண்டு நாம் இருக்கிறோம். அழகே அசிங்கமாகவும், அறிவே இருளாகவும் வேறு வேறு சமயங்களில் தோன்றுகிறது. நாம் பார்க்கிறோம். உணர்கிறோம். முன்பு புரிந்ததாக இருந்ததெல்லாம் இன்று புதுமையாக, புரியாத புதிராக, புரிந்து கொள் என்று மனசை நச்சரிக்கும் சில்வண்டாகத் தெரிகிறது. நாம் தடுமாறுகிறோம். கீழே விழுகிறோம். விழுந்து சிரிக்கிறோம். சிரித்து அழுகிறோம். இதை எல்லாம் வெளிக்காட்ட கலைஞனுக்கு ஆத்திரம் எண்ணிய திண்ணிய, மண்ணிய புண்ணிய என்று கட்டங்கட்டும் வரம்புகட்டு உட்பட அவனுக்குப் பொறுமையில்லை என்பது மாத்திரமல்ல. உட்பட மறுக்கிறான். இதில் ஒரு அலை புதுக்கவிதை. பல பக்கங்கள் கொண்ட வைரக்கல் போன்றது புதுக்கவிதை, ஒரு பக்கம் அழகு. புதுமாதிரியான அழகு. வியக்கும் அழகு, ஒருபக்கம் ஏக்கம், மனமுறிவு, பெருமூச்சு, காதல், தத்துவம், கோபம், சந்தேகம், அறைகூவல், சமகால விமர்சனங்கள், தன் மனத்தையே குடைந்தெடுத்து ஆராயும் நேர்மை, பாலுணர்ச்சி, பொங்கல், ரேஷன், | | |
|
|