பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 200

காந்தீயம், கம்யூனிஸம், அறச்சீற்றம், ஸ்வதரிசனம், டிவால்யுவேஷன், காலை, இரவு,
நிலா வர்ணனைகள், கனவு மயக்கநிலைகள், ஞானம், உபதேசம் இறுமாப்பு, மனமாறுதல்--
இப்படிப் பலபலபக்கங்கள் உண்டு. சுருங்கச் சொன்னால், இன்று நம்மிடையே இருக்கும்
உணர்ச்சிகள் அனைத்தின் பிரதி பலிப்பையும் நாம் புதுக் கவிதையில் காண்கிறோம்.

     வரைமுறையற்ற தன்மை, நூதனப் படிமங்கள், மயக்க நிலையையும் வெளிப்படுத்தும்
முறை. கொச்சை மொழிப்பிரயோகங்கள் முதலியவை எப்படிப் புதுக்கவிதைக்கு
வலுவேற்றுகின்றனவோ அதே போல அவை புதுக்கவிதையை பலவீனப்படுத்தும்
சாதனங்களாகவும் அமைவதற்குச் சந்தர்ப்பங்கள் உண்டு என்பதை உணர்ந்து கவிஞன்
விழிப்போடிருக்க வேண்டும். நான் எப்படி விமர்சகர்களைப் பார்த்து இது பழசா புதுசா
என்று முதலில் பார்க்காதீர்கள். கவிதையா அன்றா என்று பாருங்கள் என்று
கேட்கிறேனோ, அதே போல படைப்பாளிகளுக்கு (என்னையும் சேர்த்துத்தான்)
‘புதுக்கவிதை படைக்க வேணும் என்று நினைக்காமல், கவிதை செய்ய வேணும் என்று
நினையுங்கள்’ என்று கூற விரும்புகிறேன்.

     எப்படி யாப்பிலக்கணப்படி எழுதியதெல்லாம் கவிதையாகாதோ, அப்படியே
அவ்விலக்கணம் தப்பிப் பிறப்பதெல்லாம் புதுக்கவிதை ஆகிவிடாது. அதுபோலவே,
எழுதியவனுக்கே புரிந்திராத ‘அதிகஷ்டமான கவிதை மிக உயர்ந்த புதுக்கவிதை
ஆகிவிடாது. சொல் புதிது, பொருள் புதிது, கற்பனை வளம் புதிது. பேசாப் பொருளைப்
பேச நான் துணிகிறேன் என்பதோடு, விளங்காப் பொருளை விளக்க நான் முயல்கிறேன்
என்பதையும் நான் நினைவுறுத்திக் கொள்ளவேண்டும். நான் விழிப்புடன் இல்லாவிட்டால்,
என்னையே ஏமாற்றிக் கொள்ளப் புதுக் கவிதையில் வாய்ப்புண்டு. படிமங்களையும்
பிராய்டின் குறியீடுகளையும் கொட்டி நிரப்பி, சொற்களை வெட்டி ஒட்டி புதுக் கவிதையின்
உருவமில்லாத உருவத்தில் ‘புரியாத்தன’ த்தையும் சேர்த்து நான் எழுதிவிட்டு அதைப்
புதுக் கவிதை என்று உலாவவிட்டுவிட முடியும். நான் கெட்டிக்காரனானால். எட்டு
நாளைக்காவது ஊரை என் புலமையில் நம்பிக்கை வைக்கச் செய்து விட முடியும்.
புதுசானதினாலே; இப்படி நேர்வதும் நேராதிருப்பதும் கவிஞனின் நேர்மையைப்
பொறுத்தது. ‘நான் எழுதியிருப்பது கவிதைதானா, அது எனக்கு விளங்குகிறதா என்று
நானே உரைத்துப் பார்த்துக் கொண்டால்தான், நான் தோண்டியெடுத்திருப்பது தங்கமா
கல்லா என்று எனக்குத் தெரியும் தங்கத்தின் மாற்று பார்ப்பது மற்றவர்கள் வேலை”.
(சார்வாகன்-‘புதுக்கவிதை’)

     இனி ‘கசடதபற’ கவிதைகளைக் கவனிக்கலாம்.
 
     ‘கசடதபற’வின் முக்கியமான கவிஞர் ஞானக் கூத்தன், இவரது தனி நோக்கு,
கவிதையாற்றல் குறித்து ‘நடை’ பற்றி எழுதுகையில் ஓரளவு சொல்லியிருக்கிறேன். பின்னர்
ஒரு சமயம்.
 
‘அரசாங்கத்துக் கட்டிடத்தில்
தூக்கம் போட்ட முதல் மனிதன்
நீ தான் என்னும் காரணத்தால்’