பக்கம் எண் :

201  வல்லிக்கண்ணன்

     சங்க காலக் கவி மோசிகீரனாரை வியந்து பாராட்டி இவர் எழுதிய நல்லகவிதை
இவரது தனித்த பார்வைக்கும் கவிதையில் புதுமை சேர்க்கும் விருப்புக்கும் சான்று கூறியது.

     ஞானக்கூத்தன் கவிதைகளில் இனிமையும் இயல்பான சொல்லோட்டமும் ஒலி நயமும்
அமைந்து கிடக்கின்றன. கவிதைக்காக இவர் தேர்ந்து கொள்கிற விஷயப் புதுமையும், தான்
உணர்ந்ததை நவீனமான பரிகாசத் தொனியோடு எடுத்துச் சொல்வதும்,கவிதை சொல்லும்
முறையில் புதுமைகளைக் கையாள்வதும் இவரது படைப்புகளுக்கு விசேஷ நயம்
சேர்க்கின்றன, ‘கசடதபற’ ஞானக்கூத்தனின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளது.

     வெறும் ஆர்ப்பாட்டப் பிரசங்கிகள், வேஷம் போடும் போலித் தலைவர்கள்
போக்கை ‘நடை’ நாட்களிலேயே கிண்டல் செய்வதில் ஆர்வம் காட்டிய ஞானக்கூத்தன்
‘கசடதபற’விலும் அதைத் திறமையாகச் செய்திருக்கிறார். ‘மஹ்ஹான் காந்தீ மஹ்ஹான்’
இதற்கு உதாரணம் ஆகும்.

     நாடோடிப் பாடல்களின் பாணியில் கவிதை எழுதி வெற்றி கண்டிருக்கிறார் இவர்.
 
  ‘காடெ’ கோழி வெச்சுக்
கணக்காக் கள்ளும் வெச்சு
சூடம் கொளுத்தி வெச்சு
சூரன் சாமி கிட்ட
வரங்கேட்டு வாரீங்களா
ஆரோ வடம் புடிச்சி
அய்யன் தேரு நின்னுடுச்சி’
 
என்று ஆரம்பித்து வளரும் ‘தேரோட்டம்’ குறிப்பிடத் தகுந்தது.
 
  ‘கண்ணிமையாக் கால் தோயாத் தேவர் நாட்டில்
திரிசங்கைப் போக விட மாட்டேன் என்று
ஒரு முட்டாள் சொன்னது பேராபத்தாச்சு
 
என எடுப்பாகத் தொடங்கி, ‘அன்று முதல் பிரம்மாவும் விஸ்வாமித்திர மாமுனியும்
படைத்தவைகள் அடுத்தடுத்து வாழ்ந்துவரல் வழக்காச்சு. எடுத்துக்காட்டு: மயிலுக்கு
வான்கோழி, புலிக்குப் பூனை, குதிரைக்குக் கழுதை, குயிலுக்கு காக்கை, கவிஞர்களுக்
கெந்நாளும் பண்டிட் ஜீக்கள்’ என்று முடியும் ‘யெதிரெதிர் உலகங்கள்’ படித்து ரசிக்கப்பட
வேண்டிய நல்ல கவிதை.
 
  தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?
உன் பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?
 
என்று கேட்கும் ‘அம்மாவின் பொய்கள்’ அருமையான படைப்பு.

     சும்மா வேடிக்கையாகவும் கவிதை எழுதலாம், அது ரசமாகவும் அமையும் என்று
நிரூபிக்கும் விதத்தில் ஞானக்கூத்தன் பல கவிதைகள் படைத்திருக்கிறார்.