பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 20

ஸ்தானம்- நிரந்தரமான ஸ்தானம்-உண்டா?”
 
     28-5-1939 ‘சூறாவளி’ இதழில் வந்த இதுதான் அச்சு ரூபத்தில், புதுக்கவிதைக்கு
விரோதமாக எழுந்த முதலாவது எதிர்ப்புக் குரல் ஆகும்.
 
     4-6-1939 இதழில் ‘மயன்’ சிறுபதில் ஒன்று கொடுத்திருந்தார்.
 
     “Vers Libre” என்ற பதம் ‘சுதந்திரத்தை நோக்கி’ என்று அர்த்தப்படும்- மேல்
நாடுகளில் சென்ற ஒரு நூற்றாண்டாகக் கலைகளின் தளைகளை அறுத்தெறியச்
செய்யப்பட்டு வரும் முயற்சிகளுக்கு பொதுவாக இப்பெயர் வழங்கி வந்திருக்கிறது.
 
     கவிகளுக்கு சுதந்திரம் வேண்டியதுதான் என்று ஒப்புக்கொள்ளும் மகராஜ் ஓரளவுக்கு
மேல் அந்த சுதந்திரம் இருக்கக்கூடாது என்று சொல்லுகிறார். கட்டுப்பாடில்லாதது என்று
சொல்லப்படும் இந்தக் கவிதைக்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு; அதை அனுசரித்து
எழுதினால்தான் அது கவிதையாகும் என்பதை மறந்து விட்டார் மகராஜ்.
 
     என்னைப் பற்றிய வரையில் “எல்லா இலக்கியத்துக்கும் பொதுவான பாஷை,
அர்த்தம் என்ற இரண்டு கட்டுப்பாடுகளே அதிகம் என்று சொல்லுவேன்”.
 
     அதே இதழில், வசனகவிதை முயற்சியைக் கேலி செய்யும் ‘வசனகவிதை’ என்னும்
பரிகாசப் பாடல் ஒன்றும் வெளிவந்தது. அதை எழுதியவர் பெயர் வெறும் ‘எஸ்’ என்றே
தரப்பட்டிருந்தது.*
 
 

வசன கவிதை
 

 
  எதுகையும் மோனையும்
வேண்டவே வேண்டாம்
சீரும் கீரும்
சுத்தச் சனியன்கள்
வெண்பாவும் கிண்பாவும்
விருத்தமும் திருத்தமும்
வேண்டாத தொல்லைகள்
 
மட மட வென்றும்,
கட கட வென்றும்,
மள மள வென்றும்
வசன கவிதை
எழுதித் தள்ளுவோம்
“ததாஸ்து”
வாணியின் விலங்குகள்-

கைவிலங்கும் கால்விலங்கும்
படார், படார்!
டணார், டணார்!
 
________________
* அப்படி ‘எஸ்’ என்ற பெயரில் எழுதியது தானேதான் என்று ‘சுந்தா’ பின்னர் என்னிடம் தெரிவித்துள்ளார்.