பக்கம் எண் :

21  வல்லிக்கண்ணன்

  விலங்குகள் எல்லாம்
பொடிப் பொடியாகுக!
பொடிந்த பொடியை
ஹே காற்றே.
கடலில் சேர்ப்பாய்.

ஜல்தி! ஜல்தி!
டம், டம், டம்.
புரட்சி, புரட்சி
இலக்கிய உலகில் புரட்சி செய்வோம்
தாளத்தைப் போக்கிக்
கூளத்தைக் கூப்பிடுவோம்.
இசையைத் தகர்த்து
இம்சைகள் செய்வோம்.
அமைப்பை நொறுக்கி
அலங்கோலம் செய்வோம்

அகத்திய முனிவரை
“ஹோ ஹோ” வென்று
அலற வைப்போம்.

கம்பனைக் கதற வைப்போம்.
எத்தனை சாத்தனார்
எதிர்த்து வந்த போதிலும்
அச்சம் இல்லை; அச்சம் இல்லை
அச்சம்
என்பது
இல்லையே
 
 
     இதற்குப் பதில் பரிகாசச் செய்யுள் ஆக 11-6-39 இதழில் வந்தது. ‘நாணல்’
எழுதியிருந்தார். அந்நாட்களில் நாணல் (பேராசிரியர் அ. சீனிவாசராகவன்) வசன கவிதை
எழுதிக் கொண்டிருந்தார். அவரது அத்தகைய படைப்புக்கள் ‘காலேஜ் மேகஸின்’ களில்
பிரசுரமாகி வந்தன. அவை இப்போது கிடைக்கமாட்டா.
 
     ‘சூறாவளி’யில் அவர் எழுதிய பரிகாசம் ‘யாப்பின் பெருமை’. அது பின்வருமாறு;
 
     ‘சில ஆண்டுகளுக்குமுன், வளையாகேசி என்ற பழந்தமிழ் நூலைப்பற்றிய வரலாற்றை
ஆராய நேர்ந்த பொழுது பஃறுளிப் பள்ளம் என்ற ஊரிலே வேளாண் மரபிலுதித்தவரும்,
புலவருக்கு வரைவிலாது வழங்கும் வள்ளலும், சிவநேசச்செல்வருமான உயர் திருவாளர்
பலகந்தற் பிள்ளையவர்களிடத்திலே அருமையான பழஞ்சுவடிகள் பல இருப்பதைக்
கண்ணுற்று, பிள்ளையவர்களின் பேரன்பின் வழியாக அமைவதைப் பெற்றுப் பல காலம்
ஆராய்ச்சி செய்ததன் பயனாக தற்போது, வசனக்கவிதை என்று உலவி வருகின்றவிடமானது
பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமேயே தமிழ் கூறும் நல்லுலகிற்றோற்ற, அவ்வமயம்
பாற்கடலிற்றோற்றிய நஞ்சையுண்டு வானவர்க்கருளிய பெம்மானைப்போற் பல புலவர்கள்
இந்நஞ்சைத் தலைசக்காட்ட வொட்டா தடித்து அமிழ்தினுமினிய