பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 204

  முந்தின மட்டை விட்ட இடத்தில்
வெள்ளைப்பள்ளம் வாயாய்ச்சிரிக்கும்
சுற்றிலும் மூக்குகள் வெள்ளை வாய்கள்’
‘தென்னம் பாளையில் அடங்கிக்கிடந்த
பூக்கள் ஒரு நாள் சீறி வெடிக்க
சத்திய புருஷன் பரம்பரை யென்று
அணில்கள் ஓடுது சமசரம் செய்ய,
 
     ‘தென்னை’ கவிதையில் உள்ள நயமானவரிகளில் இவைசில.

     ‘கசடதபற’ மூலம் தெரியவந்த கவிஞர்களில் மற்றும் ஒருவர் கலாப்பிரியா,
‘என்னுடைய மேட்டு நிலம்’ கவனிப்புக்கு உரிய, புதுமையான ஒரு படைப்பு.
 
  என்னுடைய மேட்டு நிலம்
நேற்றுப் பெய்த மழையில்
குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது

என்னுடைய மேட்டு நிலத்தை.
இன்றை வெயில்
நெருப்பால் வருத்திக்கொண்டிருந்தது

(என்னுடைய மேட்டு நிலம்
நாளைய ‘வெறுமையில்’
தவம் புரிந்து கொண்டிருக்கும்)
என்னால்- அதன்
எல்லா அனுபவங்களையும்
உணர முடிகிறது.

ஏனென்றால்,
இறந்துவிட்ட - என்னை
அதில் தான் புதைத்திருக்கிறார்கள்.
 
     ‘இந்தக் குளத்தில், நாளை நீர் வந்துவிடும்’ என்றும் அதனால் நிகழக் கூடிய
சிலவிளைவுகளை சிந்திக்கும் ‘பிரிவுகள்’ ‘அந்திக்கருக்கலில், அலைமோதிக் கரையும்,
பெண்பறவை’க்காக இரங்குகிற ‘விதி’ ஆகியவை பாராட்டுதலுக்கு உரியவை. ‘செருப்புகள்’
பற்றியும், மற்றும் பல சிறு சிறு ‘கவிதை’களும் இவர் எழுதியிருக்கிறார் அவைகளில்
அநேகம் கவிதைகளாக இல்லை.


     நீலமணியும் ‘கசடதபற’வில் சின்னச் சின்னக் கவிதை’கள் (நான்கு வரிகள், மூன்று
வரிகள், இரண்டு வரிகளில் கூட) நிறையவே எழுதியிருக்கிறார். ஆனால், அவை
அனைத்துமே கவிதைகள் ஆகிவிடமாட்டா.
 
     சிரிப்பு மூட்டும் என்பதற்காகப் பேசப்படுகிற கேலிகளும்’ கிண்டல்களும், சாமர்த்தியக்
குறிப்புகளும் சிலேடைகளும், குறும்புத்தனமான, விஷமத்தனமான, உரைகளும் கவிதை
என்ற பெயரில் பிரசுரம் பெற ஆரம்பித்துவிட்டன.