நான் கண்ட நாய்கள், நடுநிசி நாய்கள், பின்திண்ணைக் காட்சி, காற்று, போன்ற காட்சி அனுபவங்களும், ஆந்தைகள், சவால் போன்ற பொருள் பொதிந்த கவிதைகளும், நாகரிக மங்கையர் போக்கை பரிகசிக்கும் ‘பூக்கள்’ ஆவேச மேடைப்பேச்சுக்களின் தன்மையைக் கிண்டல் செய்யும் ‘வார்த்தைவளம்’ ஆகியவையும், மனஉணர்வுகளை வெளிப்படுத்தும் ‘தெருப்பாராக்காரருக்கு’, ‘பிரமைகள்’ ஆகியனவும் பசுவய்யாவின் தற்காலநோக்கையும் மனநிலைகளையும் பிரதிபலிக்கும் படைப்புகள் ஆகும். ‘கண்ணாடி முன் கடவுளையும் சேர்த்து ஒரு புகார்’ குறிப்பிடப்பட வேண்டிய ஒரு கவிதை. | | என் மனம் என் முகம் நக்க கன்றின் குறியை தாய் நாக்குப் போல் நக்கி அடிமடி எக்களித்து சுகம் காண கிளுகிளுப்பு கால் இழுக்க எத்தனை தரம் உன் முன் நகர்த்தப் பட்டேன்? இப்பொழுது அதற்கு அல்ல. உலர்ந்த என் முகம் வெளிப்படும் சலிப்பில் ஸ்பரிசித்தது ‘இருக்குமே உனக்கு ஓரு முகம்’ எங்கே அது? என் பிம்பத்தின் பின்னிலா? நான் இன்றி உன்னைக் காண ஒரு ஆசை உன் முகம் காண விழையும் என் முகமே உன் முகம் மறைக்கும் விசித்திரக் கொடுமை. நீதான் பளிங்கு எனில் மரமும் கடலும் குருவிகளும் நக்ஷத்திரங்களும் வால் துடிக்க கத்தும் அணிலும், புணர்ச்சியும் கணக்கும் கருத்தும் தமுக்கின் ஓசையும் என் முன் என் முகம் கக்குவது ஏன்? என்று ஆடை உரித்து அம்மணம்பற்றும் என்பார்வை. | | |
|
|