பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 220

வானம்பாடி

     “மனித சமுதாயத்தின் துக்கங்கள் துயரங்கள் இங்கேயானாலும் எங்கேயானாலும்,
உறவும் சொந்தமும் கொண்டாடி பங்கு கொண்டு, அவைகளை வேரோடு சாய்க்க எழும்
வெண்கல நாதங்கள் நாங்கள்.

     மனிதாபிமானம், முற்போக்கு, உழைப்பின் பெருமிதம், விஞ்ஞானம் இவற்றைக்
கவிதைக் கலையில் உயிர் வனப்போடு அள்ளிப் பொழியும் வித்தக விரல்கள்
எங்களுடையவை. மொழி, இனம், சாதி, சமய, நிறக்கொடுமைகள் - பிளவுகள்-
பேதங்களைத் தரைப் புழுவாய் மிதித்து நசுக்கும் ஆவேசம் எங்கள் மூலதனம்.
நவநவமான உத்திகளில் புதுப்புதிதான உருவ வார்ப்புகளில், சமூகத்தில்
நசுக்கப்பட்டவர்களின் நியாயங்களை உள்ளடக்கமாகப் புனையும் இலக்கியவாதிகள் நாங்கள்.
முற்போக்கு, மனிதாபிமானம் ஆகிய நல்லிலக்கியப் பண்புகளைக் கூர்மைப் படுத்தவல்ல
தத்துவங்களைக் கவித்துவங்களோடு இரண்டறக் கலந்து இலக்கிய அரங்கில் நாங்கள்
புனிதப்போர் நடத்துகிறோம். எத்தனை காலத்திற்கு அச்சமும் பேடிமையும், அடிமைச்
சிறுமதியும் சமூகத்தின் நீதிகளாகப் போதிக்கப் படுகின்றனவோ அத்தனை காலத்துக்கு
எங்கள் கவிதைகளில் கோபத்தொனி இழையோடத்தான் செய்யும்.

     ஆனால் தலைதெறிக்க ஓங்காரக்கூச்சல் போடுவதே கவிதை, புரட்சிக் கவிதை என்று
சொல்லமாட்டோம்.கோஷங்களின் ஊர்வலமே கவிதை என்பதை நாங்கள் மறுதலிக்கிறோம்,
அந்தப் போலி இலக்கியத்தனம் எங்களுக்குக் கிடையாது. நயமில்லாத சொற்சேர்க்கைகளும்,
நபும்சக வீறாப்பும் இலக்கியமாகி விடாது என்பதை நாங்கள் அறிவோம். அதனால்தான்
மாரீசப் படையல்களின் புற்றீசல்களுக்கு நடுவே நாங்கள் ஒளிப்பறவைகளாய் உலா
வருகிறோம்.

     மரபை நாங்கள் பழைய தலைமுறையின் பரிசோதனைகளாய் மதிக்கிறோம். எனில்,
சேரன் செங்குட்டுவனின் பஞ்சகல்யாணிக் குதிரையில் இன்று நாம் சவாரி செய்ய முடியாது
என்பதால், பாரியின் தேர் நமது முல்லைக் கொடிகளுக்குப் பந்தற்கால் ஆகமுடியாது
என்பதால், கலா மாற்றங்களுக்கான கருத்து மாற்றங்களை - வடிவ மாற்றங்களை படைப்பது
சிருஷ்டி கர்த்தாவின் உயிரினும் மேலான உரிமை என்பதை எக்காளமிட்டு எடுத்துக்
கூறுவோம். மரபறிந்து மரபெதிர்க்கும் போக்கு உணராதவர்கள் இலக்கிய வரலாற்றின் எந்த
அம்சத்தையும் அறியாதவர்கள்.

     ஒரே சமயத்தில் சமுதாயக் கண்ணோட்டமும் புத்திலக்கிய நோக்கும் கொண்ட ஒரு
கவிதை இயக்கம் எங்களுடையது.

     ‘மானுடம் பாடும் வானம்பாடிகள்’ என்று தங்களைக் குறிப்பிட்டுக் கொண்ட
கவிஞர்களின் அறிவிப்பு இது.