பக்கம் எண் :

221  வல்லிக்கண்ணன்

    ‘நிகழ்காலத்தின் சத்தியங்களையும் வருங்காலத்தின் மகோன்ன தங்களையும்
தரிசிப்பதற்காக’ உண்மையும் உணர்ச்சியுமே இருசிறகாய்’ கொண்டு, கவிதை வானத்தில்
சஞ்சரிக்க முன் வந்த முற்போக்குக் கவிஞர்களே வானம்பாடிகள்.

     சமுதாய அவலங்களைக் கண்டு, தார்மீகக் கோபம் கொண்டு தங்கள் உள்ளத்தின்
உணர்ச்சிகளுக்குக் கவிதை வடிவம் தர முயன்ற இக்கவிஞர்களின் ‘விலை இல்லாக்
கவிமடல்’ தான் ‘வானம்பாடி’.
 
  எரிமலையின் உள்மனங்களாய்
அக்கினிக் காற்றில் இதழ் விரிக்கும்
அரும்புகளாய்
திக்குகளின் புதல்வர்களாய்
தேச வரம்பற்றவர்களாய்
அஞ்சாத அமில நதியின்
அலைப்படைகளாய்
பூமியின் பிரளயங்களாய்
காலத்தின் வசந்தங்களாய்
யுகத்தின் சுவடுகளாய்
நிறங்களில் சிவப்பாய்
மண்ணை வலம்வரும் பறவைகளாய்
மானுடம் பாடிவரும் வானம்பாடிகளின்
விலையிலாக் கவிமடல்
 
என்று தங்கள் வெளியீடு பற்றி, பெருமையோடும் மகிழ்ச்சியோடும் விளம்பரம்
செய்துள்ளார்கள் இக்கவிஞர்கள்.

     “இந்த இயக்கம் திடீரென ஆகாயத்திலிருந்து பொன்னூஞ்சலாடிக் கொண்டுவந்ததல்ல.
‘வானம்பாடி’ 1971ல் தோன்றியது. கோவையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இயங்கி
வந்த இலக்கிய அமைப்புகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்தின் குறீயீடாக வானம்பாடி
சிறகடிக்கத் தொடங்கியது. வானம்பாடிக் கூட்டங்கள் மாதந் தோறும் நடந்தன. பின்,
வானம்பாடி - விலையிலாக் கவிமடல் வெளியிடும் பொறுப்பை ஏற்றனர். இந்த இதழுக்கு
ஏற்பட்ட சமூக அங்கீகாரம் இலக்கிய இயக்கமாகச் செயல்பட ஏற்றதோர் சூழலைத்
தோற்றுவித்தது.

     மாதந்தோறும் இலக்கியப் பிரச்சினைகள் பற்றி தவறாமல் ஆய்வரங்குகள்
நடைபெற்றன. தமிழ்க்கவிதை அந்தரத்தில் திரிசங்காய் இருப்பது சரியல்ல. துரிதகதியில்
மாறிவரும் உலகச் சூழலில் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின்
கலாச்சார, அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகளைப் பற்றி இவ்வியக்கம் சரிவரத்
தெரிந்து கொள்ளாமல், தன்காலடியை முன்வைக்கக்கூடாது. அதுவும் யுகத்தின் மீது
சுவடுகள் பதிக்க விரும்பும் வானம்பாடிகள் இதைத் தம் கவனத்தில் வைத்துக் கொள்வது
அவசியம். பிற மொழி இலக்கிய அறிமுகம் நம்மை வளர்க்கும். இவை தவிர தன்னைத்தான்
சுய விமர்சனம் செய்து கொள்ளாமல் தான் வளர இயலாது.

     இந்த அடிப்படைகளின்மேல் வானம்பாடி இதழின் கட்டுமானங்கள் நடந்தன.
ஆய்வரங்குகளில் கவிதைப் படையல்களும்,