பக்கம் எண் :

227  வல்லிக்கண்ணன்

     ‘உலக வாழ்வை உதறி எறிந்து வீர வாழ்வை விளையாட்டாக்கி விட்ட இனத்தார்’.
 
  நிலத்தைக்குடைந்து இரும்பைக் கண்டு
ஆற்றை மடக்கி வயலிற் பாய்ச்சி
காளையைக் கட்டி ஏரில் பூட்டி
வித்துக்கள் தேடி விளைவைப் பெற்று
ஆடை புனைந்து அணிகலன் செய்து
வீட்டையமைத்து வியன் நகர் கண்டு
தேட்டை பெருக்கிய தேவேந்திரனை
பேயாய் பிசாசாய் நாயாய் நரியாய்
எள்ளித் தள்ளினர்!
 
என்று அகலிகை கூறுகிறாள்.

     படைப்புக்காலம் தொட்டு இன்றுவரை, அடக்கி ஒடுக்கி அமுக்கி வைக்கப்பட்டு
அலட்சியப்படுத்தப் பெற்று - அவமதிக்கப்பட்டு - உரிய முறையில் கௌரவிக்கப்படாமலும்
திருப்தி செய்யப்படாமலும் குமைந்து கொதிக்கிற பெண் இனத்தின் எடுத்துக் காட்டு
அகலிகை.
 
  அவள் கணவன் -
மந்திர மொழியை வாயில் அரைத்து
வேள்வியில் இதயத்தை வேகவைத்துத் தின்று.
உடலக் கூட்டை உயிர்க் கயிற்றில் கட்டி
இழுத்துத் திரியும் எந்திரம்.
 
     அவனோடு நடத்திய தாம்பத்திய வாழ்க்கையில் அவள் அனுபவித்த கொடுமைகளை
அகலிகை விவரிக்கிறாள். தான் மட்டுமின்றி, தன்னைப் போன்ற பத்தினிகள் அனைவரும்
அனுபவித்த அவலவாழ்வு அது. கணவன் என்பவன்-
 
  தவப்பயிரை மனயானை அழித்து மருட்டும் போது
தன்உடல் காப்புக்கு என்மேனிமலையில் ஏறிக்கொள்வான்
நள்ளிரவில் திருடனாக வந்து..
என்னைக் கேட்பானா.. மாட்டானே-
மேனி மலையில் ஏறி
நாகப்பாம்பாய் முகம் தூக்கி
ஒரு சில முறை ஊதித்தள்ளி
விஷவித்தை உடலில் தூவி, இறங்கி ஓடி..
மனக் குகைகுள்ளே மறைந்து கொள்வான்
காலையில்
வேதத்தை வேகமாய் விசிறுவான்!
 
     இந்நிலையில், ‘ஆசைப்புயல் அடித்தடித்துத் திமிர்ந்து கிடந்த தசைத், தீயை, எந்த
நாய்க்கு முன்னரும் எடுத்தெறியத் தயாரானாள்’ அகலிகை.

     உழைக்க விரும்பாத முனிவர்களுக்கும், உழைக்கும்படி கட்டாயப் படுத்திய
இந்திரனுக்குமிடையே நிகழும் போராட்டம் பற்றியும் அவள் சொல்கிறாள்.