| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 234 |
பிரம்மா, ரிஷிதேவன், தீர்த்தங்கரன் எனும் இளைஞர்களின் முற்போக்குப் புதுக்கவிதைகள். ‘செந்நெல் வயல்கள்’ - குருவிக்கரம்பை சண்முகம் எம்.ஏ., மரபுக்கவிதைகளுடன், புதுக்கவிதைகளும் எழுதியுள்ளார். பருவப் பயணம், பழகத் தயார் ஆகி, கள்ளக்காதல் நடத்தும் பூங்கொடி பற்றிய ‘கள்ளத்தோணி’ பாலைவனப் பாதையை வர்ணிக்கும் ‘மணல் வழி’ போன்ற புதுக்கவிதைகள் இதில் இருக்கின்றன. 1973ல் வானம்பாடி கவிஞர்களின் கவிதைத் தொகுதியான ‘வெளிச்சங்கள்’ பிரசுரமாயிற்று. தர்மு அரூப் சிராமின் ‘கண்ணாடியுள்ளிருந்து’ என்ற தொகுப்பு ‘அஃ’ வெளியீடாக வந்தது. ஞானக்கூத்தன் கவிதைகள் ‘அன்று வேறு கிழமை’ எனும் அழகிய புத்தக வடிவில் பிரசுரமாயின. சேலம் தமிழ் நாடனின் முற்போக்குக் கவிதைகள் ‘மண்ணின் மாண்பு’ என்ற புத்தகமாகவும் ஸெக்ஸ் கவிதைகள் ‘காமரூபம்’ என்றும் வெளிவந்தன. கலாப்பிரியாவின் கவிதைகள் ‘தீர்த்த யாத்திரை’ என்ற தொகுப்பு உருவம் பெற்றன. ‘எழுத்து பிரசுரம்’ புதுக்குரல்கள் தொகுப்பு மதுரை பல்கலைக்கழகம் எம்.ஏ. தமிழ் வகுப்புக்குப் பாட நூலாகப் தேர்வு செய்யப்பட்டது. அதனால் சி.சு. செல்லப்பா ‘புதுக்குரல்கள் இரண்டாம் பதிப்பை’ திருந்திய பதிப்பு ஆகப் பிரசுரித்தார். தமிழன்பன் கவிதைகள் ‘தோணி வருகிறது’ என்ற தொகுப்பு ஆயின. கலாநிதி க. கைலாசபதி புதுக்கவிதை பற்றிய ஒரு சிறு ஆய்வுரையை இதற்கு முன்னுரையாக அளித்திருக்கிறார்கள். இராஜபாளையம் இலக்கிய நண்பர் த.பீ. செல்லம் தனக்குப் பிடித்த - தான் மிகுதியாக ரசித்த - புதுக்கவிதைகளை, இலக்கிய பத்திரிக்கைகள் பலவற்றிலிருந்தும் தொகுத்து எடுத்து ‘விதி’ என்ற புத்தகமாக வெளியிட்டார், வல்லிக்கண்ணன் முன்னுரையுடன். 1974ல், மு. மேத்தாவின் கவிதைகள் ‘கண்ணீர்ப் பூக்கள்’ என்ற புத்தகமாகத் தொகுக்கப் பெற்றன. கவிஞர் மீரா சமூக அவலங்களை, அரசியல் உலக அக்கிரமங்களை, ஊழல் பேர்வழிகளின் லீலைகளை எல்லாம் நகைச்சுவையோடு குத்திக்காட்டும் கவிதைகள் எழுதியுள்ளார். அவற்றைத் தொகுத்து ‘ஊசிகள்’ என்ற புத்தகமாகப் பிரசுரித்தார். இவர் எழுதிய காதல் கவிதைகள் முன்பே (1971ல்) ‘கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள் என்ற புத்தகமாக வெளிவந்துள்ளன. துரை சீனிச்சாமியின் கவிதைகள் ‘அந்தி’ என்றும், கே. ராஜகோபால் கவிதைகள் ‘பசப்பல்’ என்றும், வல்லிக்கண்ணன் கவிதைகள் ‘அமர வேதனை’ என்றும் புத்தகங்கள் ஆயின. இவை ‘எழுத்து பிரசுர’ங்கள். சி.சு.செல்லப்பா மாகத்மா காந்தியின் வாழ்க்கையையும் இந்தியாவின் இன்றைய நிலையையும் சிந்தித்து எழுதிய ‘நீ இன்று இருந்தால்’ என்ற குறுங்காவியம் தனிப் புத்தகமாக்கப்பட்டது. | | |
|
|