செல்லப்பாவின் கவிதைகள் ‘மாற்று இதயம்’ என்ற தொகுதியாக வெளிவந்தது. இவையும் ‘எழுத்து பிரசுர’ங்கள்தான். சிவகங்கை ‘அன்னம் நட்புறவுக் கழகம்’ 1974ல் இரண்டு தொகுதிகள்பிரசுரித்தது. ‘அபி’யின் ‘மௌனத்தின் நாவுகள்’ அப்துல்ரகுமானின் ‘பால்வீதி’ தான் அவை. தஞ்சை மாவட்டம், தலைஞாயிறு என்ற ஊரில் உள்ள ‘தலைஞாயிறு இலக்கிய அமைப்பு’ ‘நாற்றங்கால்’ என்ற தொகுதியைத் தயாரித்து வெளியிட்டது. 32 கவிஞர்களின் 42 கவிதைகள், ‘கசடதபற’ இலக்கிய நோக்குடைய கவிஞர்கள் பலரும் இதில் எழுதியிருக்கிறார்கள். ப. கங்கைகொண்டான் எழுதிய பலரகமான புதுக்கவிகளும் ‘கூட்டுப் புழுக்கள்’ என்று தொகுக்கப் பெற்றுள்ளன. பெரிய வடிவம் கொண்ட இப்புத்தகத்தில் கங்கைகொண்டான் தீட்டிய ஓவியங்களும் இணைக்கப்பட்டுள்ளன. பரிணாமன் தனது கவிதைகளை ஆகஸ்டும் அக்டோபரும் என்ற புத்தகமாகத் தொகுத்திருக்கிறார், தொழிலாளித் தோழர்களுக்கு உணர்ச்சி ஊட்டும் நோக்கத்தோடு, சமுதாயப் பார்வையுடன் எழுதப்பட்ட முற்போக்குக் கவிதைகள் இவை. நவபாரதியின் நீண்ட முன்னுரையுடன் கூடியது. சக்திகனலின் ‘கனகாம்பரமும் டிசம்பர் பூக்களும்’ என்ற தொகுப்பு ஒன்று வெளி வந்தது. கவிஞர் சிற்பியின் கவிதைத் தொகுப்புகள் சிலவும் வந்துள்ளன. சி. மணியின் கவிதைகள் சில ‘வரும் போகும்’ என்ற தொகுப்பாகப் பிரசுரமாயின. (க்ரியா வெளியீடு). இவைதவிர, என் கவனத்துக்குக் கொண்டு வரப்படாத புதுக் கவிதைத் தொகுப்பில் வேறு சில வந்திருக்கவும் கூடும். | | |
|
|