பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 236

ஈழத்தில் புதுக்கவிதை

     தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஈழத்து எழுத்தாளர்கள் அரும்பணி
ஆற்றியுள்ளனர்; ஆற்றி வருகிறார்கள். எனவே ஈழத்து எழுத்தாளர்களின் சாதனையைக்
கவனத்துக்கு கொண்டு வராத எந்த இலக்கிய வரலாறும் பூரணத்துவம் பெற்றது ஆகாது
என்பது என் கருத்து.. புதுக்கவிதைத் துறையில் ஈழ நாட்டில் குறிப்பிடத் தகுந்த
ஆக்கவேலைகள் ‘கிராம ஊழியன்’ ‘கலாமோகினி’ காலம் தொட்டே நடந்து வந்துள்ளன.
‘எழுத்து’ காலத்தில் புதுக்கவிதை முயற்சி ஈழத்திலும் வேகம் பெற்று வளர்ந்தது. பின்னர்,
தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது போலவே, அங்கும் இத்துறையில் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

     ஈழத்துப் புதுக்கவிதை. முயற்சிகள். வளர்ச்சிகள் பற்றி விவரங்கள் கோரி நான்
இலங்கை நண்பர்கள் சிலருக்கு எழுத நேரிட்டது. கலாநிதி க. கைலாசபதி இவ்வகையில்
எனக்குப் பெரிதும் உதவியிருக்கிறார். அவருடைய ‘முன்னாள் மாணவர்’ செ. யோகராஜா,
சிரத்தை எடுத்து, சில கட்டுரைகள் தயாரித்து அனுப்பி வைத்தார். இப்பகுதியில்
காணப்படும் தகவல்களுக்கு அக்கட்டுரைகளே ஆதாரம். நண்பர் கைலாசபதி, யோகராஜா
இருவருக்கும் என் நன்றி உரியது.

     ஈழத்துக்கவிதை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முனைப்பான சில மாற்றங்களை
ஏற்படுத்தியவர்கள் நாற்பதளவில் தோன்றிய ‘மறுமலர்ச்சிக் குழுவினர்’ ஆவார். பழைய
செய்யுள் மரபில் நவீன கவிதைக்குரிய இயல்புகளைப் புகுத்திச் சாதனைபுரிந்த மறுமலர்ச்சி
குழுவினரே ஈழத்தின் புதுக்கவிதை ஆரம்ப கர்த்தாக்களும் கூட, அவர்களுள் வரதர் (தி.ச.
வரதராசன்), சோதி (சோ. தியாகராசா), விஜயன் தங்கம் குறிப்பிடத்தக்கவர்கள்.

     வாழ்க்கை முறை, கல்வி முறை முதலியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களும்,
சஞ்சிகைகளின் தோற்றமும், புதிய சிந்தனைகளின் தாக்கமும், புதுமை வேட்கையும்,
இளமைத் துடிப்பும் ஒன்றுபட்டு, இக்குழுவினரிடம் நவீன இலக்கியத்தில் ஈடுபாட்டினை
ஏற்படுத்தின. இத்தகைய ஈடுபாட்டின்-பரிசீலனை தாகத்தின் வெளிப்பாடே புதுக்கவிதையை
எழுதிப் பார்க்கவும் தூண்டிற்றெனலாம்.

     இவர்களது இம்முயற்சிக்கு சமகாலத் தமிழ் நாட்டின் போக்கு பெரிதும் உந்து சக்தி
அளித்தது - மணிக்கொடி, சூறாவளி பத்திரிகைகளினால் ஈழத்து எழுத்தாளர்கள் பாதிப்பு
பெற்றிருந்தனர். 1942ல் வெளிவந்த ‘கலாமோகினி’யில் புதுக்கவிதை வெள்ளம் போல்
பெருக்கெடுத்தது. 1943 ‘கிராம ஊழியன்’ வெளிவரத் தொடங்கியதும் அது மேலும் வேகம்
பெற்றது.

     ‘கிராம ஊழியன்’ வெளிவரத் தொடங்கிய காலத்திலேயே ஈழத்திலும்
யாழ்ப்பாணத்தில் ‘மறுமலர்ச்சிச் சங்கம்’ தோன்றியது. அச்சங்கம் வெளியிட்ட
‘மறுமலர்ச்சி’யிலும் ‘பாரதி’யிலும்,