பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 24

சம்பந்தமே கிடையாது. கருத்திலும் சரி உருவத்திலும் சரி.

     ஆம், வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற்கும் அணி அலங்காரம்
உண்டு. அதற்கும் தளையுண்டு. மோனையுண்டு. எல்லா வற்றிற்கும் மேலாக அதற்கும்
‘ரிதும்’ உண்டு. செய்யுள் எழுதுவதைக் காட்டிலும் வசன கவிதை எழுதி வெற்றி
பெறுவதுசிரமம் செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைக்கும் ஒரு இசை இன்பத்தை
ஊட்டிவிடும். ஆனால் வசன கவிதையில் கருத்தின் வேகமும் உணர்ச்சியும் சொல்லில்
தட்டினால்தான் கொஞ்சமாவது கவர்ச்சி கொடுக்கும். சொல்லில் கவிதையின் அம்சம்
இல்லாவிட்டால் அது வசன கவிதையாகாது-வெறும் வசனம்தான்.

     இந்த முறையில் வசன கவிதையைத் தமிழில் முதல் முதலாகக் கையாண்டவர்
சுப்பிரமணிய பாரதிதான். ‘காட்சிகள்’ என்று அவர் எழுதியிருக்கும் சித்திரங்களைப்
படிப்பவர்கள் வசனம் எதுவென்றும் வசன கவிதை எதுவென்றும், தெளிவாக அறியலாம்.
அவருக்குப் பின்னால் அவரைப் பின்பற்றி எழுதி வருபவர்கள் ஒரு வேளை அவ்வளவு
வெற்றி பெறாமல் இருக்கலாம். இன்னும் பரீஷை நிலையிலேயே இருக்கலாம். அதனால்
வசன கவிதை செய்யுளின் முன் நிற்க முடியாதென்றோ, அது கவிதையாகாதென்றோ யாரும்
சொல்ல முடியாது. எட்வர்ட் கார்பென்ட்டரும், வால்ட் விட்மனும் ஆங்கிலத்தில் பெற்ற
வெற்றிக்குப் பிறகு, பாரதியே தமிழில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, தமிழில் வசன கவிதையை
எந்தக் கற்பனை உச்சியிலும் கையாளலாம் என்பது ஒரு சிலரின் தீர்மானம். முயன்று
பார்த்து விடுவது என்றும் ஓரிருவர் தீர்மானித்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

     நாணல் பரிகாசமாக எழுதிய பிறகு இந்தப் பதில் கூடத் தேவையில்லை. ஆனாலும்
காளிதாஸன் சொல்வதுபோல,
 
  (புராணமித்யேவே நசாது ஸர்வம்.
நசாபி காவ்யம் நவமித்யவத்யம்)
 

     பழையது என்பதாலேயே எல்லாம் குற்றமற்றவையல்ல. ‘புதிது என்பதால் மட்டும்
எல்லாம் பேசத்தகாதவை அல்ல என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.’

     இவ்வாறு பதில் அளித்த ‘கவிதைத் தொண்டன்’ கு.ப.ராஜகோபாலன் தான். அவர்
இதே கருத்தைப் பின்னர் தன் பெயரில் மேலும் சிறிது விரிவாக ‘கலாமோகினி’யில்
எழுதியிருக்கிறார்.

     இந்த விவாதம் பூராவும், ‘ஆசிரியருக்குக் கடிதம்’ என்ற உருவத்தில், ‘சொல்லுங்கோ’
எனும் தலைப்பில்தான் அச்சாகி வந்தது.

     பதினோராவது இதழில் விவாதத்திற்கு சம்பந்தம் இல்லாதது போன்ற கடிதம் ஒன்று
பிரசுரமாயிற்று.

     “ஐயா, தற்போது தங்கள் பத்திரிகை வாயிலாக ஒரு விவாதம் ஆரம்பமாகியிருக்கிறது,
அந்த விவாதத்தின் முடிவைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் பாரதி ஒரு
இடத்தில் ‘ஸரஸ்வதியும் இலக்கியமும்’ என்ற தலைப்பில் சில வரிகள் எழுதியிருக்கிறார்.
அது தற்கால இலக்கியத்திற்கு (இலக்கியமென்று கருதிச் செய்யப்படும் கவிகளுக்கு)
பொருத்தமா?