பக்கம் எண் :

25  வல்லிக்கண்ணன்

     அந்த வரிகள் வருமாறு:

     ‘உலக நடையிலே, உண்மை முதலிய குணங்கள் ஸரஸ்வதி தேவியின் கருணைக்கு
நம்மைப் பாத்திரமாக்கி, நம்மிடத்திலே தேவவாக்கைத் தோற்றவித்து நமது வேள்வியைக்
காக்குமென்பது கண்டோம். இலக்கியக்காரருக்கோவென்றால் இத்தெய்வமே குலதெய்வம்,
அவர் இதனைச் சுடர் செய்யும் உண்மையுடனே போற்ற வேண்டும். எதுகை
மோனைகளுக்காக சொல்ல வந்த பொருளை மாற்றிச் சொல்லும் பண்டிதன் ஸரஸ்வதி
கடாஷத்தை இழந்து விடுவான். யமகம். திரிபு முதலிய சித்திரக் கட்டுக்களை விரும்பிச்
சொல்லுக்குத் தக்கபடி பொருளைத் திரித்துக் கொண்டு போகும் கயிறுப் பின்னிப் புலவன்
வாணியின் திருமேனியை நோகும்படி செய்கின்றான். அவசியமில்லாத அடைமொழிகள்
கோப்போன் அந்த தெய்வத்தின் மீது புழுதியைச் சொரிகின்றான். உலகத்தாருக்குப்
பொருள் விளங்காதபடி இலக்கியஞ் செய்வோன் அந்த சக்தியைக் கரித் துணியாலே
மூடுகின்றான். வெள்ளைக் கலையுடுத்துவதில்லை. மனமறிந்த உண்மைக்கு மாறு சொல்லும்
சாஸ்திரங்ககாரனும், பாட்டுக் காரனும் ஸரஸ்வதிக்கு நிகரில்லாத பாதகம் செய்கின்றனர்.
 

     இலக்கியத்துத் தெளிவும் உண்மையுமே உயிரெனலாம். இவ்வுயிருடைய வாக்கே
அருள்வாக்கு என்று சொல்லப்படும்.

     ‘இலக்கிய ரஸிகன்’

     மீண்டும் ‘எஸ்’ தனது அபிப்பிராயத்தை வெளியிட்டார். பதிமூன்றாவது இதழில்.

     ‘மகராஜுக்குப் பக்க பலமாக நான் வந்தது போல, ‘நாண’லுக்குப் பக்கபலமாக (வசன)
‘கவிதைத் தொண்டன்’ வந்தார். அவர் முதல் பாராவில் சீர், தளை, எதுகை, மோனைகளை
அனுசரிக்காமல் எழுதிய கவிதை நன்றாக இருக்க முடியாது என்பதே அவர்களுடைய
கட்சிபோல் இருக்கிறது’ என்று சொல்லுகிறார். ஆனால், மூன்றாவது பாராவில் ‘ஆம், வசன
கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற்கும் அணி, அலங்காரம் உண்டு, அதற்கும்
தளையுண்டு, மோனையுண்டு’ என்று சொல்லிக் கொண்டே போகிறார். இந்த
வாக்கியங்களில் எதை ஆதாரமாகக் கொள்வது என்று தெரியாமல் தயங்குகிறேன்.

     ‘செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைகளுக்கும் ஒரு இசை இன்பத்தை
ஊட்டி விடும்’ என்று சொல்லுகிறாரே அப்படி ஒரு இசையானது வெறும் வார்த்தைக்கு
இன்பத்தை ஊட்டுவதும் ஒரு தூஷணையா என்ன? வார்த்தைக்கு வார்த்தை இசை
பொங்குவதில் தானே இன்பம் இருக்கிறது யாப்பின் பெருமையே அதுதானே?

     பாரதி ‘காட்சிகள்’ மூலமாக வசன கவிதைக்கு வெற்றிமாலை சூட்டி விட்டாராம்!
கண்ணன் பாட்டுக்களையும், தேசியகீதங்களையும் ஸ்தோத்திர பாக்களையும், வேதாந்தக்
கவிகளையும், பாஞ்சாலி சபதத்தையும் பாடிய பாரதியார், ‘காட்சிகள்’ எழுதியதன் மூலமாகத்
தமது பெருமையைக் குறைத்துக் கொண்டார் என்பது தான் எனது அபிப்பிராயம். இந்தக்
‘காட்சி’களில் அடங்கிய வசன கவிதைகளை கவிதைத்தொகுதியில் சேர்த்ததே எனக்குப்
பிடிக்கவில்லை.