‘மாதமோர் நான்காய் நீர் - அன்பு வறுமையிலே என்னை ஆழ்த்தி விட்டீர்’ என்று பாரதியார் வாணியைக் குறித்துப் பாடுகிறார் அல்லவா? அப்படி வாணியின் அன்பு தோன்றாத காலத்தில். அதாவது தூண்டுதலும் ஆர்வமும் ஆற்றலும் இல்லாத காலத்தில்தான் பாரதியார் இந்த வசன கவிதைகளை எழுத நேர்ந்தது என்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் எட்வர்ட் கார்பெண்டரும், வால்ட்விட்மனும் ஹென்லியும், ஆமிலோவல்லும், இவரும் அவரும், கவிதை எழுதுகிறார்களே என்பதற்காக நாமும் எழுத வேண்டுமா என்ன? தமிழில் வெண்பா என்ன, விருத்தம் என்ன, மெட்டுப் பாட்டுகள் என்ன, இவைகள் ஒவ்வொன்றிலும் அநேக விதங்கள் என்ன, இவைகளையெல்லாம் ஒரு நல்ல கவி, சிறந்த கவி எவ்வளவு அற்புதமாகக் கையாளுகிறான் என்பதை ஏன் நாம் மறக்க வேண்டும்? இவைகள் மூலமாகக் காட்ட முடியாத எந்த ரசபாவத்தை இந்த வசன கவிதை காட்டப் போகிறது? ‘எஸ்’ஸின் கடிதத்துக்கு, ‘கவிதைத் தொண்டன்’ பதில் கூறவில்லை. அவருக்குப் பதிலாக ‘ரஞ்சன்’ என்று கையெழுத்திட்டு பின்வரும் கடிதம் பதினான்காவது இதழில் வெளியாயிற்று. ‘கவிதைத் தொண்டனுக்கு’ ‘எஸ்’ பதிலளித்திருக்கிறார். சிறிய விஷயங்கள் எவ்வளவு அனாயாசமாகத் தட்டுக் கெட்டுப்போய் விடுகின்றன என்பதற்கு அவருடைய பதில் ஒரு அத்தாட்சியாக விளங்குகிறது. முதல் பாராவையும் மூன்றாவது பாராவையும் வைத்துப் பொருத்திப் பார்க்க முயன்ற ‘எஸ்’ கடைசி வரியை மறந்து விட்டார். அதையும் சேர்த்து யோசித்திருந்தால்தான் விஷயம் விளங்கிப் போயிருக்கும்! ‘இனிமேல் என் நடையில் கொஞ்ச நஞ்சமிருக்கும் கவிதையும்கூட வடிகட்டி எடுத்து விடுகிறேன்’ என்று ‘கவிதைத் தொண்டன்’ கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்! ஏனெனில் அவர் அப்படி எழுதாமல் ‘வசன கவிதைக்கும் இலக்கணம் உண்டு; ஆனால் அது பழைய இலக்கணம் அல்ல’ என்று மட்டும் சொல்லியிருந்தால், அது ‘எஸ்’ஸுக்குத் தெரிந்திருக்கும்! பாரதியாரின் காட்சிகளைப் பற்றி ‘எஸ்’ அபிப்பிராயம் கூறும் இடத்துக்கு வந்த உடனே எனக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. ‘எனக்குப் பிடிக்கவில்லை’ என்பதற்குப் பிறகு வாதமே இல்லை. எங்கள் வீட்டுக் குழந்தைக்கு ‘அல்வா’வே பிடிக்காது! பாகற்காய்தான் பிடிக்கும். உண்மைத் தமிழ்க் கவிதைக்கு (வசன கவிதை அல்ல) இவ்வளவு பாடுபடும் நண்பர்கூட கடைசியில் ‘எஸ்’ என்று போட்டுக் கொண்டிருப்பது ‘எனக்குப் பிடிக்கவில்லை’. ஆங்கிலத்தில் ‘அவரும் இவரும்’ எழுதியதற்காக நாமும் வசன கவிதை எழுதவேண்டாம். ‘வேண்டும் என்று கவிதைத் தொண்டனும் பிடிவாதம் பிடிக்கவில்லை. ஆங்கிலத்திற்கும் அதனுடைய வெண்பா, விருத்தங்கள், எல்லாம் இருக்கின்றன. அவைகள் ஒரு உன்னத முறையில் கையாளப்பட்டும் இருக்கின்றன. அவர்களுக்குப் பிறகும் வால்ட் விட்மன் முதலியோர் வேறுவிதத்தில் வெற்றி |