பக்கம் எண் :

27  வல்லிக்கண்ணன்

யடைந்திருக்கிறார்கள் என்பதே அவ்வாதத்தின் சாரம். ‘யாப்புத் தளைகளை சற்றுத்
தளரவிட்டு, மனத்தில் பொங்கிவரும் கவிதா உணர்ச்சிகளுக்கு கொஞ்சம் அதிக இடம்
கொடுப்போம்’ என்கிறார் கவிதைத் தொண்டன். உணர்ச்சிகள் வசனத்தை மீறி வரும்
போதும், யாப்பின் சங்கிலிகள் அதைக் கட்டியணைத்து விட முயற்சிக்கும் போதும் தான்
எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு வசன கவிதை பிறக்கிறது. இதில் ‘கவிதைத்
தொண்டனை’ விட நான் ஒருபடி அதிகமாகவே போக விரும்புகிறேன். வசன கவிதை,
கவிதா உணர்ச்சிகளைக் கொட்டுவதில் கவிதைக்கும் மேல் போய் விடுகிறது என்பதே என்
எண்ணம்.

     ‘கவிதை மூலமாகக் காட்ட முடியாத எந்த பாவத்தை இந்த வசன கவிதை காட்டப்
போகிறது?’ என்று ‘எஸ்’ கேட்கிறார். அவர் இருக்கும் திக்கு நோக்கி வணங்குகிறேன். ஏன்
காட்டக் கூடாது என்றுதான் கேட்கிறேன்?

     இத்துடன் இந்த விவாதம் நின்று விட்டது.

     ந. பிச்சமூர்த்தி ‘சூறாவளி’யில் கதை, கட்டுரை, கவிதை எழுதவுமில்லை, வசன
கவிதை பற்றிய விவாதத்தில் கருத்துத் தெரிவிக்கவுமில்லை. அவர் அவ்வப்போது
கவிதைகள் எழுதிக் கொண்டுதானிருந்தார். எப்போதாவது அவருடைய கவிதை ‘சக்தி’
போன்ற பத்திரிகையில் இடம் பெற்று வந்தது.

     1940 களில் ‘கலா மோகினி’ தோன்றிய பின்னரே புதுக்கவிதை புது வேகத்தோடு
வளர இடம் கிடைத்தது. 1942ல் தான் பிச்சமூர்த்தி வசன கவிதை பற்றிய தமது
எண்ணத்தை ஓரளவு வெளியிட்டார்.