முந்திய தலைமுறையினரின் சாதனைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவாவும் இவர்களில் பெரும்பாலோருக்கு இல்லை. உலக இலக்கியத்தை அறிந்து கொள்ளும் தாகமும் துடிப்பும் மிகக் குறைவாகவே காணப்படுகிறது, கூரிய நோக்கும். விசால மனோபாவமும் இல்லாததனால், தமக்கென வாழ்க்கை பற்றிய கொள்கையோ பிடிப்போ தத்துவப்பார்வையோ லட்சிய உறுதியோ இவர்களில் பலரால் கொள்ள முடிவதே இல்லை. இக்குறைபாடுகள் இவர்களது எழுத்துக்களிலும் பிரதிபலிக்கின்றன. ஆற்றலும் அனுபவமும் ஊக்கமும் பெற்ற படைப்பாளி இளைஞர்களது போக்கும் விபரீதமாகவே அமைந்து காணப்படுகிறது. தங்களுக்கு முந்தியதை அங்கீகரிக்க மனமில்லாத இவர்கள் அவற்றை அழித்துவிட (ஒழித்துக்கட்ட) ஆசைப்படுகிறார்கள். மரபுக் கவிதை படைப்பதில் சிறு வெற்றி கண்ட இளையதலைமுறைக் கவிஞர்கள், ‘பாரதி என்ன சாதித்து விட்டான்? அவன் எழுதினது கவிதையா? இவன் எழுதியது என்ன கவிதை?, என்று பழித்துப் பேசியும், கிண்டல் செய்தும், தம்மைத் தாமே மெச்சியும் பேசுவது சகஜமாக இருக்கிற நாட்டில், புதுக் கவிதை எழுதிப் பெயர் பெற்றவர்களும் அதையே ஒரு மரபு ஆக்கி வருகிறார்கள்! பிச்சமூர்த்தி எழுதியது புதுக்கவிதை இல்லை. சி. மணி எழுதியது கவிதையே இல்லை என்றெல்லாம் பேசிவந்தவர்கள் இப்போது காரசாரமாகத் தங்கள் எண்ணங்களைக் கட்டுரைகளாக்க முற்பட்டிருக்கிறார்கள். திறமை காட்டிப் படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சிலரை மட்டம் தட்டுவதிலும் உற்சாகம் பெறுகிறார்கள். இந்தப் போக்கு ‘எதையும் எழுதலாம் - எப்படியும் எழுதலாம்’ என்ற நோக்குடைய கலைப் படைப்பாளிகளிடம் மட்டும்தான் நிலவுகிறது என்றில்லை. சமுதாயப் பார்வையோடு உழைப்போர் நலனுக்காகவும் உரிமைக்காகவும், புதுயுகம் படைப்பதற்காகக் கவிதை எழுதுவோம் என்று கிளம்பிய முற்போக்காளர்களிடமும் இக்குறைபாடு பரவியுள்ளது. தங்கள் ஆற்றலை நிரூபிக்க முற்பட்டு, ஒரு இயக்க வேகத்தோடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்த வானம்பாடிக் கவிஞர்களுக்குள்ளும் பிளவு ஏற்பட்டுவிட்டது. 1974 பிற்பகுதியில், சி.சு. செல்லப்பாவும் நானும் ‘எழுத்து பிரசுர’ங்களை விற்பனை செய்வதற்காக, திருநெல்வேலி மாவட்டம் நெடுகிலுமுள்ள கல்லூரிகள் அனைத்துக்கும் போய்வந்தோம். எங்கும் தமிழ்த்துறைப் பேராசிரியர்களும், எம்.ஏ. தமிழ் மாணவர்களும் ‘புதுக்கவிதை’யில் அக்கறையும் ஆர்வமும் கொண்டுள்ளதை அறிந்து மகிழ்வுற்றோம். உண்மையாகவே சந்தேகங்களைத் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், புதுக்கவிதைக்காரர்களை ‘மட்டம் தட்ட வேண்டும்’ என்ற நோக்குடனும் எங்களிடம் பலப்பல கேள்விகள் கேட்கப்பட்டன. நாங்கள் உரிய முறையில் தகுந்த பதில்களைக் கூறினோம். ‘புதுக்கவிதைக்கு எதிர்காலம் உண்டா? வளமான இலக்கணத்தையும் ஆழமான கவிதை மரபையும் கொண்ட தமிழ் இலக்கியத்தில் | | |
|
|